அக்னித்தலம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்தில், ஸ்ரீ ரமண பகவானின் 142 -வது ஜெயந்தி விழாவில், இசைஞானி இளையராஜா பங்கேற்று ரமண பகவானின் பாடலைப் பாடி சாமி தரிசனம் செய்தார்.


1879-ஆம் ஆண்டு திருச்சூழி கிராமத்தில் மார்கழி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ ரமண பகவான். வேங்கடராமனாக பிறந்த ரமணர் சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். வேங்கடராமனுக்கு 12 வயது ஆனபோது அவரது தந்தை மரணம் அடைந்தார். அப்போதே அவரது மனதில், ‘மரணம் என்பது என்ன’, ‘மரணத்திற்குப் பிறகு அந்த உயிர் என்ன ஆகிறது எங்கே போகிறது’ என்ற கேள்விகள் அவருடைய மனதில் எழுந்ததாக கூறப்படுகிறது.  அதன் பிறகு தந்தையை இழந்ததால், சித்தப்பாவின் பொறுப்பில் விடப்பட்ட வேங்கடராமன், 1891-ஆம் ஆண்டு மதுரை சென்றார். அங்கு அவருக்கு கல்வியில் பெரிய அளவில் கவனம் செல்லவில்லை. அதன் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அவரை வெகுவாகக் கவர்ந்தது. அதிக நேரம் அந்தக் கோவிலிலேயே செலவிட்டார்.


இதைத் தொடர்ந்து, இனிமேல் தனது இருப்பிடம் திருவண்ணாமலை என்று முடிவு செய்து, விசேஷ வகுப்புக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு, 3 ரூபாயை எடுத்துக்கொண்டு 1896-ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி திருவண்ணாமலைக்குப் புறப்பட்டு வந்தார்.



வழியில், கையில் இருந்த பணம் செலவானதால், மாம்பழப்பட்டு என்ற ஊரில் இருந்து திருக்கோவிலூர் வழியாக நடந்தே 1896-ம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி திருவண்ணாமலை வந்தடைந்தார். கட்டி இருந்த வேட்டியில் கோவணம் என்ற அளவுக்கு துணியைக் கிழித்து மற்றவற்றை குளத்தில் வீசினார். கோவணத்தை மட்டுமே அணிந்துகொண்டு, யாரிடமும் தீட்சை பெறாமல், தன்னைத்தானே துறவியாக அறிவித்துக்கொண்டார். திருவண்ணாமலை கோவிலுக்குள் சென்ற வேங்கடராமன், முதலில் சில நாட்கள் அங்குள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார். ஆனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் வரவே, யாருமே அதிக அளவில் வராத பாதாள லிங்கம் இருக்கும் அறைக்குள் சென்று அமர்ந்து தியானம் செய்தார். அப்போது அவருக்கு 19 வயது. 6 வார காலம் அவர் அங்கேயே அமர்ந்து இருந்ததால், அவர் மீது பூச்சிகள் ஊர்ந்து அவரைக் கடித்து காயப்படுத்தின. ஆனாலும் அவர் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தியானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது



பல நூறு ஆண்டுகளுக்கு முன், இமயமலைக் குகைகளிலும், அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்த அந்தக் கால ரிஷிகளின் வரலாற்று எச்சமாக, கடந்த நூற்றாண்டில் கண்முன் வாழ்ந்த துறவி ஸ்ரீரமண மகரிஷி என நம்புகின்றனர் பக்தர்கள். இந்நிலையில் இன்று திருவண்ணாமலை - செங்கம் சாலை மற்றும் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமண பகவானின் ரமணாசிரமத்தில், மார்கழி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது



முன்னதாக மங்கள இசையுடன் தொடங்கிய ஜெயந்தி விழாவில் ரமண பகவான் சிலைக்கு ஆசிரமத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுத்து, வேத மந்திரங்கள் முழங்க ரமண பகவானுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.இந்த ஜெயந்தி விழாவில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு ரமண பகவானின் பாடலைப்பாடி, சாமி தரிசனம் செய்தார்.