கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்திற்குட்பட்ட கோதவாடி கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் சேமிக்கப்படும் மழைநீர் மற்றும் பி.ஏ.பி கால்வாய் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து வந்தன. ஆனால் கடந்த 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீரின்றி இந்த குளம் வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சரின் உத்தரவுப்படி பி.ஏ.பி. கால்வாயின் உபரி நீரை கோதவாடி குளத்திற்கு வழங்கும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோதவாடி குளம் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. 




இந்நிலையில் பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கோதவாடி குளத்தை பார்வையிட வந்தார். அப்போது குளத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் மலர் தூவினர். மேலும் குளக்கரையில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் பொங்கல் வைத்து வழிபாடு ஆகியவை அ.தி.மு.க. வினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த திமுகவினர் அப்பகுதியில் குவியத் துவங்கினர். இதையடுத்து பாதுகாப்பிற்காக காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர்.




30 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்ப காரணம் திமுகவா அல்லது அதிமுகவா என்பதில் இரு தரப்பினருக்கும் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது.  குளம் நிரம்ப காரணமாக இருந்தது போல் அ.தி.மு.க.வினர் அரசியல் செய்வதாக கூறி, திமுகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ”குளத்தை நிரப்பியது தி.மு.க., பொங்கல் வைப்பது அ.தி.மு.க.வா? வீண் விளம்பரம் தேடாதே” என திமுகவினர் பொள்ளாச்சி ஜெயராமனை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.






 


இதையடுத்து காவல் துறையினர் ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க.வினரை குளக்கரையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி செருப்பை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் சமரசப்படுத்தி இரு தரப்பினரையும் கலைந்து செல்ல செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனிடையே பொள்ளாச்சி ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளித்தனர்.