தமிழகத்தில் இரண்டாவது ஆண்டாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்டது. வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை வாசித்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் 80 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

இந்த பட்ஜெட் குறித்து திருவாரூரைச் சேர்ந்த விவசாயி அழகர்ராஜ் கூறுகையில், “வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளில் 80 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேளாண்மை வளர்ச்சி திட்டங்களுக்கு 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நான்கு கிராமங்களுக்கு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமிக்கப்படுவது குறித்த அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. சிறுதானியங்களை அரசே கொள்முதல் செய்து கல்வி நிலைய நிறுவனங்களுக்கெல்லாம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது இதன் மூலம் சிறுதானிய உற்பத்தி பெருகும் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகள் உற்சாகமடைவார்கள். பயிர் காப்பீடு திட்டத்தில் 2300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதனை வரவேற்கிறோம். உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் விவசாயிகளின் கோரிக்கை 80 சதவிகித கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக கருதுகிறோம் இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த பட்ஜெட்டை வரவேற்கிறோம்” என தெரிவித்தார்.



 

தமிழக இயற்கை உழவர் இயக்கத்தை சேர்ந்த வரதராஜன் கூறுகையில், “நெல் ஜெயராமன் மரபுசார் நெல் விதைகளை இனத்தூய்மையோடு பாதுகாத்து கொடுக்கும் விவசாயிகளுக்கு 10 நபர்களுக்கு தலா 3 லட்சம் விதம் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிற விவசாயிகளுக்கு ஒரு ஊக்கமும் பெற்று மிகப்பெரிய அளவில் இயற்கை விவசாயத்தை வளப்படுத்துவதற்கும் விரிவு படுத்துவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. அங்கக வேளாண்மையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு  நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். பல்லுயிர் பெருக்கத்துக்கு இடையூறு இல்லாத  ஒரு உயிர் வழி இயற்கை விவசாயத்தை செய்கின்ற விவசாயிகளுக்கு இந்த விருது கிடைக்க இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.