மயிலாடுதுறை: டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதியாக விளங்கும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அகணி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்களை, இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்த காட்டுப் பன்றிகள் முற்றிலும் நாசம் செய்து அழித்து வருகின்றன. இதனால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், மிகுந்த மன உளைச்சலில் ஆளாகியுள்ளதால், காட்டுப் பன்றிகளை உடனடியாகச் சுட்டுப் பிடிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement

வாழ்வாதாரத்திற்கான போராட்டம்

அகணி கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். விவசாயத்தையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட இந்தப் பகுதி விவசாயிகள், முப்போகம் விளைவித்த பகுதியிலிருந்து தற்போது ஒருபோகத்திற்குக் கூட வழி இல்லாமல் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.

இயற்கை இடர்பாடுகளான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றை எதிர்கொண்டு, பலமுறை அழிவைச் சந்தித்தாலும், விவசாயத்தை விட முடியாமல், கடன்களைப் பெற்று மீண்டும் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட்டு, தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement

காட்டுப் பன்றிகளின் அட்டகாசம்

இயற்கை இடர்பாடுகளில் இருந்து சற்று மீண்டு வந்த நிலையில், தற்போது இந்தப் பகுதி விவசாயிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் உள்ளது. அகணி கிராமத்தைச் சுற்றியுள்ள வயல்களில் இரவு நேரங்களில் கூட்டமாகப் புகும் காட்டுப் பன்றிகள், தற்போது விளைச்சலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் சம்பா நெற்பயிர்களை வேரோடு பிடுங்கியும், மிதித்தும், தின்றும் நாசம் செய்து வருகின்றன. இதன் காரணமாக சுமார் 50 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த நிலப்பரப்பில் விவசாயம் செய்து வரும் சிறு மற்றும் குறு விவசாயிகள், தங்கள் குடும்ப வருமானத்திற்காகச் செய்த ஒட்டுமொத்தப் பயிரும் ஒரே இரவில் அழிந்து போனதால், பெரும் பாதிப்புக்குள்ளாகி, எதிர்காலம் குறித்த பயத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

அரசின் மெத்தனப் போக்கிற்குக் கண்டனம்

காட்டுப் பன்றிகளின் இந்தத் தொடர் சேதத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்விதமான உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

"நாங்கள் கடன் வாங்கி, இரவு பகல் பாராமல் உழைத்த பயிர்கள் அனைத்தும் கண்முன்னே அழிந்து போகிறது. தொடர்ந்து புகார் அளித்தும் வனத்துறை இதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. எங்கள் வாழ்வாதாரம் நாசமாவது அவர்களுக்குத் தெரியவில்லை," என்று வேதனை தெரிவித்தனர்.

தமிழக அரசுக்கு அவசரக் கோரிக்கை

தற்போதுள்ள சூழலில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள், ஒரே ஒரு தீர்வு மட்டுமே தங்களுக்கு உள்ளது என்று நம்புகின்றனர்.

உடனடியாகத் தமிழக அரசு, விவசாயத்தைப் பிரதான தொழிலாக வைத்துள்ள அகணி கிராம விவசாயிகளின் துயரத்தைப் போக்க, காட்டுப் பன்றிகளைச் சுட்டுப் பிடிக்க உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவே பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், எதிர்காலப் பயிர்களைப் பாதுகாக்கவும் ஒரே வழி என அவர்கள் கருதுகின்றனர்.

மேலும், காட்டுப் பன்றிகளால் நாசமடைந்த 50 ஏக்கர் சம்பா நெற்பயிர்களைப் பற்றி உடனடியாக வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான அகணி கிராமத்தில், காட்டுப் பன்றிகளால் ஏற்பட்ட பயிர்ச் சேதம் விவசாயிகளைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடன் சுமை மற்றும் வாழ்வாதார அச்சுறுத்தலில் சிக்கியுள்ள இவர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்று, உடனடியாக காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.