சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செழுமை கருவூலம் – சீமைக் கருவேலமில்லா விருதுநகர்" சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் இன்று (29.07.2026) விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி பெரிய கண்மாய், பிசிண்டி, விருதுநகர் கௌசிகா நதி, சாத்தூர் வைப்பாறு மற்றும் படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கை (TNPIPER) ஆகியவற்றின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் "செழுமை கருவூலம் – சீமைக் கருவேலமில்லா விருதுநகர்" என்ற சிறப்பு முன்முயற்சியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
பசுமை வளத்தை மீட்டெடுக்கும் பணி இத்திட்டத்தின் முதற்கட்டமாக, அரசு நிலங்கள், ஆறுகள், கண்மாய்கள், கால்வாய்கள், நீர்நிலைகள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் இதர பொதுநிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் முழுமையாக அகற்றி, அவற்றிற்குப் பதிலாக உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பூர்வீக மர இனங்களை நடவு செய்து பசுமை வளத்தை மீட்டெடுக்கும் பணிகள் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள்
இப்பணிகளை மாவட்டம் முழுவதும் விரைவாகவும், தரமான முறையிலும் மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுடனும் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, துறைவாரியாக செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. மேலும், சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் காணப்படும் பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் அகற்றும் பணிகள் திட்டமிடப்பட்டன. அதன் ஒருபகுதியாக, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், விவசாய நிலங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்கள் மற்றும் வளாகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றி, அதற்குப் பதிலாக பூர்வீக மர இனங்களை நடவு செய்யும் பெருந்திரள் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் (Mass Eradication of Prosopis juliflora) இயக்கம் கடந்த 15.07.2026 அன்று மாவட்டம் முழுவதும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் நடவடிக்கையாக சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேருடன் முழுமையாக அகற்றப்பட வேண்டும். இப்பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் அவர்கள், சீமைக் கருவேல மரங்கள் மீண்டும் வளராத வகையில் வேருடன் முழுமையாக அகற்றப்பட வேண்டும். அகற்றப்பட்ட பகுதிகளில் உடனடியாக பூர்வீக மரக்கன்றுகள் நடவு செய்து அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், நீர்நிலைகளின் இயற்கை நீரோட்டம் பாதிக்கப்படாத வகையில் அனைத்து ஆக்கிரமிப்பு தாவரங்களையும் முழுமையாக அகற்றி, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
