விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயி ரவிச்சந்திரன் நாட்டு சர்க்கரை உற்பத்தியில் லட்சங்களில் லாபம் பார்த்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த பிஎஸ்.பாளையம் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (67) என்பவர் 22 வருடங்களாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் செயற்கை விவசாயத்தை செய்து வந்துள்ளார். செயற்கை விவசாயத்தில் அதிக லாபம் கிடைத்தாலும் மண்வளம், மண்ணின் தரம் குறைய தொடங்கியது.
இதனை கவனித்த விவசாயி ரவிச்சந்திரன் இயற்கை விவசாயம் குறித்து பல விபரங்களையும் அறிவுரைகளையும் வழங்கிய நம்மாழ்வார், பாலேக்கர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி இயற்கை விவசாயத்தில் களமிறங்க ஆரம்பித்தார். தற்போது கிருஷ்ணாஸ் ஆர்கானிக் பார்ம் ( Krishna's organic farm ) என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இயற்கை விவசாய முறையில் பாலேக்கர் முறையை கடைபிடித்து அதன்படி செயல்பட தொடங்கினார். இதனடிப்படையில் 22 வருடங்களாக இயற்கை விவசாயத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். தற்போது 20 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு அதன் மூலம் நாட்டு சர்க்கரை, வெல்லம், லிக்யூட் வெள்ளம் ஆகியன தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இது தொடர்பாக விவசாயி ரவிச்சந்திரன் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு முதலீடு என பார்த்தீர்கள் என்றால், ஆட்கள் கூலி தான் அதிகமாக இருக்கும். ஒரு 20 லட்சம் முதலீடு செய்தால், குறைந்தபட்சம் ஐந்து லட்சம் வரை நாம் லாபம் பார்க்கலாம். மேலும் ஒரு வருடத்திற்கு 20 ஏக்கரில் இருந்து 500 முதல் 600 டன் சர்க்கரை எடுத்தால் 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை நமக்கு லாபம் கிடைக்கும். இது 20 ஏக்கரில் ஆயிரம் டன்னுக்கு மேல் சர்க்கரை கிடைத்தால் எதிர்பார்த்த அளவை விட நல்ல லாபம் நமக்கு கிடைக்கும்.
கரும்புகளை பாலேக்கர் முறைப்படி ஊடுபயிர் மூலம் 8 அடி போட்டு கரும்பு சாகுபடி செய்து வந்தால், நிச்சயமாக நூறு வருடம் வரை நமக்கு கரும்பு அறுவடையாகும். கரும்புகளுக்கிடையே மணிலா, பச்சை பயிறு, உளுந்து போன்ற பயிர்களை பயிரிடலாம். மேலும் கன் ஷூட்டர் மூலம் கரும்பு பயிருக்கு தண்ணீர் பாசனம் செய்யப்படுகிறது. கரும்புக்கு உரமாக ஜீவாமிர்தம், மாட்டு சாணம் போன்ற இயற்கை உரத்தினை பயன்படுத்தி வருகிறோம். அறுவடை செய்த கரும்புகளை மெஷினில் செலுத்தி, வடிகட்டிய சாறினை பெரிய பாத்திரத்தில் செலுத்தி சர்க்கரை மற்றும் வெல்லத்திற்கு ஏற்றவாறு பதப்படுத்தி தயாரிக்கிறோம்.
1 கிலோ சர்க்கரை சில்லறை விலையில் 105 ரூபாய்க்கும், மொத்த விற்பனை விலையில் 82 ரூபாய்க்கும், வெல்லம் ஒரு கிலோ சில்லறை விலையில் 98 ரூபாய்க்கும், மொத்த விற்பனை விலையில் 76 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் நாட்டு சர்க்கரை, வெல்லம் போன்றவை திண்டுக்கல், சேலம், மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் இயற்கை விவசாயத்தில் பல பயிர்கள் கொண்டும் ஊடுபயிர் மூலம் விவசாயம் செய்தால் நிச்சயமாக லாபம் பார்க்கலாம்” என கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்