கரூரில் பிறந்து வளர்ந்த தீபிகா ரவி, தனது கிராமத்தில் விளைவித்த பொருட்களுக்கான நியாமான சந்தைகள் கிடைக்காததால் விவசாயிகள் படும் துயரத்தை நேரில் பார்த்தவர். முருங்கை விவசாயியான தனது தந்தை இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், ஏதேனும் ஒரு விவசாய பொருளை மதிப்புக்கூட்டி விற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது இந்த தொழில் முனைவு பயணத்தை தொடங்கியதாக கூறுகிறார்  தீபிகா ரவி, 


“எனது சொந்த ஊரில் முருங்கை எவ்வளவு அதிகமாக பயிரிடப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒரு நபருக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருப்பதால், இது மிகச்சிறந்த கீரையாக இருப்பதை நான் கண்டேன். சந்தையில் முருங்கையை தரமான விலைக்கு விற்க விவசாயிகள் படும் சிரமங்களையும் அறிந்தேன். அதனால்தான் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை உருவாக்கத் தொடங்கினேன், அதன் மூலம் விவசாயிகளுக்கும் உதவ முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.  




முருங்கையின் மருத்துவப்பண்புகள் 


“முருங்கையைப் பொறுத்தவரை, இலைகள், பூக்கள், முருங்கை மற்றும் வேர்கள் கூட உண்ணக்கூடியவை. அவற்றில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன மற்றும் அழற்சி எதிர்ப்பு, வயதான எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் போன்றவை உள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகின்றன" என்று தீபிகா விளக்குகிறார். 


தீபிகாவின் நிறுவனமான, தி குட் லீஃப், மதிப்பு கூட்டப்பட்ட சமையல் மற்றும் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு விவசாயியான தனது தந்தை ரவி வேலுச்சாமியுடன் இணைந்து தொடங்கப்பட்ட தி குட் லீஃப் நிறுவனம், சரியான விலை கிடைக்காமல் திண்டாடும் விவசாயிகளுக்காக முன்னெடுக்கப்பட்டது. 


ஆண்டு முழுவதும் ஒரே விலையில் கொள்முதல் 


விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை வழங்கி, அதில் இருந்து தரமான முருங்கைகளை கொள்முதல் செய்வதாக கூறும் தீபிகா, தற்போது 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் எங்களுடன் இணைந்துள்ளனர். இவர்களுக்கு சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கமான சூழலில் சிக்கவிடாமல், நியாமான விலையை வழங்கி வருகிறோம். முருங்கையின் சந்தை விலை 5 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை மாறுபடும், ஆனால் நாங்கள் ஆண்டு முழுவதும், நிலையான விலையை வழங்கி வருகிறோம்.  கரூர் மட்டுமின்றி, திண்டுக்கல், தேனி, வேலூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளிடம் இருந்தும், ஆர்கானிக் முருங்கையை கொள்முதல் செய்கிறோம். மேலும் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்தும் முருங்கையை பயிரிட்டு வருகிறோம். 


முருங்கை டீ முதல் காப்சூல்கள் வரை 


Moringa powder மற்றும் Moringa Pods powder ஆகிய இரண்டு பொருட்களில் தொடங்கிய எங்கள் பயணம் தற்போது முருங்கை காப்ஸ்யூல்கள் முதல் Moringa face packs வரை பலதரப்பட்ட பொருட்களாக விரிவடைந்துள்ளது. இவை 250 ரூபாயில் தொடங்கி 490 ரூபாய் வரை விலை போகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு உண்ணக்கூடிய பொருட்களுடன் எங்கள் வணிகத்தை தொடங்கினோம். ஓராண்டு கால ஆராய்ச்சிக்கு பிறகு, முருங்கை அரிசி மிக்ஸ், சட்னி பவுடர், முருங்கை டீ, முருங்கை காப்சூல்கள் ஆகியவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் தற்போது கோடிகளில் வருவாய் ஈட்டி வருகிறோம். 



முருங்கயில் அழகு சாதன பொருட்கள் 


2019ஆம் ஆண்டு முருங்கையை கொண்டு அழகுசாதன பொருட்களை தயாரிக்கத் தொடங்கினோம், தற்போது முடி மற்றும் தோல் பராமரிப்புகளுக்கான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். முருங்கையுடன், துளசி, இஞ்சி சேர்க்கப்பட்ட மொரிங்கோ மூலிகைத் தேனீர் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. 10 பணியாளர்களை கொண்ட எங்கள் உற்பத்தி நிறுவனம் அர்ப்பணிப்பும் ஆர்வமும் கொண்ட பெண்களால் நடத்தப்பட்டு வருகிறது.