விழுப்புரம் மாவட்டம், திருக்கனூர் அருகேயுள்ள வி. நெற்குணம் கிராமத்தில் எஸ்.கே. கால்நடை தீவன தொழிற்சாலை இயங்கி வருகிறது. கால்நடைகளைப் பாதிக்கும் ரசாயன உணவைத் தவிர்த்து, முழுவதும் தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் கால்நடை தீவனம் இது. சொந்த மாட்டுப் பண்ணைக்குத் தேவையான தீவனம் வாங்கி நஷ்டமடைய, அதிலிருந்து மீள்வதற்காகத் தொடங்கப்பட்டது தான் இந்த  தீவன தயாரிப்பு நிறுவனம். கலையரசன் – சங்கீதா தம்பதியால் நடத்தப்படும் இந்த தீவன தயாரிப்பு, விவசாயிகளின் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கிறது.




அன்றாடப் பணிகளுக்கு இடையில் நம்மிடம் பேசிய சங்கீதா, 'நான் பிஇ., எம்பிஏ படித்திருக்கிறேன். எனக்குத் திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. என் கணவர் கலையரசன் மாட்டுப்பண்ணை வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் கணக்குப் பார்க்கும் போது நஷ்டம் தெரியவந்தது. அப்போது ஒரு மாட்டுக்குத் தினமும் 40 ரூபாய் செலவானது. பாலின் விலை மிகக்குறைவாக இருந்தது. தீவன செலவைக் குறைத்தால் தான் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும். அந்த நேரத்தில் அருகிலுள்ள புதுச்சேரியிலிருந்து பீர் ஆலைக் கழிவுகளை (பீர் மால்ட்) வாங்கிப் பயன்படுத்துங்கள் என்று ஒரு கால்நடை மருத்துவர் பரிந்துரைத்தார். அதாவது டன் கணக்கில்தான் பீர் மால்ட்டை கொடுப்பார்கள்.




எங்களுக்கு மாதம் 5 டன் போதுமானது. மீதமுள்ளதை என்ன செய்யலாம் என்று யோசித்தோம். மாட்டுப் பண்ணை வைத்திருந்த சிலரிடம் பேசினோம். இப்படி பத்து பேர் சேர்ந்ததும் மால்ட் வாங்கிப் பகிர்ந்து கொண்டோம். பிறகு பலரும் கேட்கத் தொடங்கினார்கள். எதையும் கூடுதலாக சேர்க்காமல் அப்படியே பேக் செய்து விற்பனை செய்தோம். கடந்த 10 ஆண்டுகளாக தீவனத்தை மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறோம். உலர் தீவனம் தயாரிப்பைத் தொடங்கியபோது தான் தீவன தயாரிப்பில் முழுமூச்சுடன் இறங்கினோம். ஈரத் தீவனம், உலர் தீவனம் என எட்டு வகையான தீவனங்களைத் தயாரித்து வருகிறோம். எங்கள் பண்ணையில் சோதித்துப் பார்த்துத்தான் தீவன தயாரிப்பை பெரிய அளவில் செய்யத் தொடங்கினோம்.




நான்கு ரூபாய்க்குக் கீழே எந்த தீவனமும் கிடைக்காத போது, எங்களுடைய தீவனம் மக்களிடம் வெற்றிபெறும் என்று நம்பினோம். எங்கள் ஈரத் தீவனத்தை லேப் டெஸ்ட் செய்து பார்த்தோம். 45 நாட்கள் உறையில் வைத்துப் பார்த்தால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அப்படியே சிறு மாற்றங்கள் நடந்தாலும், கால்நடைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்தது. பின்னர் தரச் சான்றிதழ் கிடைத்ததும் தீவனங்களை முறையாக பேக் செய்து விற்பனைக்கு அனுப்பினோம்,’’ என்று ஆர்வம் பொங்கத், தொழில் தொடங்கிய காலத்தை நினைவுகூர்ந்தார் சங்கீதா.




பீர் ஆலைக்கழிவில் கோதுமை, மக்காச்சோளம், பார்லி, அரிசி என நான்கும் கலந்திருக்கும். இவர்கள் கூடுதலாக மரவள்ளி திப்பியைச் சேர்க்கிறார்கள். கோழிகளுக்கு மட்டும் கருவாடு தூள் சேர்க்கிறோம். அதனால் சளித் தொல்லை ஏற்படாது, கெட்ட கொழுப்பும் உருவாகாது. ஆறு வகையான தானியங்களைக் கலந்து ஆடு, மாடுகளுக்கான தீவனங்களைத் தயாரித்து வருகிறார்கள். குதிரைவாலி, சாமை, தினை ஆகியவற்றின் தவுடுகளும் சேர்க்கப்படுகிறது. கெமிக்கல் சேர்ந்தால் தீவனம் வீணாகாது என்றாலும், இவர்கள் அவை எதையும் கலப்பதில்லை.


ஆந்திரா, கர்நாடகா, கேரளம் மற்றும் தமிழகம் முழுவதும் எஸ்.கே. தீவனங்கள் செல்கின்றன. உள்ளூர் அளவில் கவனம் செலுத்தி, இன்று மாநிலங்களைக் கடந்து விற்பனையைப் பெருக்கியுள்ளனர். தீவன விற்பனை, லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான பணிகளை கணவரும், தீவன தொழிற்சாலை நிர்வாகத்தை மனைவியும் கவனிக்கிறார்கள். தொடந்து பேசிய சங்கீதா, ‘மொத்த வியாபாரத்தைவிடச் சில்லறை வர்த்தகம் நன்றாக இருக்கிறது. மிகக் குறைவான லாபம் வைத்தே விற்கிறோம். மூட்டைக்குப் பத்து ரூபாய் கிடைத்தால்கூட போதும். ஒரு நாளைக்கு 500 மூட்டைகள் விற்கவேண்டும் எனத் திட்டம் வைத்துள்ளோம். தீவன விற்பனையில் மாதம் 1.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும். கண்ணுக்குத் தெரியாத இழப்புகளும் உள்ளன. தீவனங்களைச் சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் அவை கெட்டுப்போகும். அதைத் திரும்ப எடுக்கச் சொல்வார்கள். இப்படி சில பிரச்னைகளும் ஏற்படும்.




பொதுவாகப் பெண்கள் திறமை இருந்தாலும் குடும்பத்திற்குப் பயந்து தயக்கத்துடன் வெளியே வராமல் இருக்கிறார்கள். தனக்குத் தெரிந்த தொழிலைத் துணிச்சலுடன் செய்யவேண்டும். எங்கள் குடும்பத்திலும் தயங்கினார்கள். என் கணவர் ஆதரவாக இருந்ததால், என்னால் முழுமையாகத் தொழிலில் ஈடுபடமுடிகிறது. ஆரம்பத்தில் நான்கைந்து பேர் மட்டுமே இருந்தார்கள். இப்போது எங்கள் நிறுவனத்தில் 25 பேர் வரை வேலை செய்கிறார்கள். இதுவே நாங்கள் அடைந்த பெரிய வளர்ச்சிதான்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் சங்கீதா.