கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி சார்பில், `சம்படா’ (SAMPADA - Scheme for Agro-Marine Processing and Development of Agro-Processing Clusters) என்ற திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, இந்தத் திட்டத்தின் மூலமாக விவசாயம் முதல் சில்லறை வர்த்தகம் வரையிலான விநியோகத்தை மேம்படுத்தும் விதமான நவீன கட்டமைப்பை உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து, இந்தத் திட்டம், `பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் கூறியுள்ளது. சமீபத்தில், இந்தத் திட்டத்தில் மீண்டும் சுமார் 4600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டு மார்ச் வரை அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.. 


பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா திட்டத்தின் விவரங்கள், அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் முதலானவை குறித்த தகவல்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம்... 


பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா.. என்ன சிறப்பு?



நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிப்பது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதற்காகவும் பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் கூறப்பட்டதன்படி, இந்தத் திட்டம் மூலம் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் எனவும், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் இதனால் உருவாகும் எனவும், விவசாயப் பொருள்களில் வரும் கழிவுகள் குறையும் எனவும், பதப்படுத்தும் உணவுகள் தயாரிப்பு, ஏற்றுமதி ஆகியவை பெருகும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அம்சங்கள்... 


மெகா உணவு நிலையங்கள்: இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உணவுப் பதப்படுத்துதல் துறைக்கான கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதோடு, பால், மீன் முதலான பொருள்களையும் விவசாயப் பொருள்களோடு பதப்படுத்தி, சிறு, குறு நிறுவனங்களுக்கும், உற்பத்தியாளர்கள், பதப்படுத்தும் நிறுவனங்கள், சில்லறை வர்த்தகர்கள் அனைவரும் இணைந்து விநியோகத்தை உறுதி செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. 


ஒருங்கிணைக்கப்பட்ட பதப்படுத்தும் செயின் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட கட்டமைப்பு: இதன் முக்கிய நோக்கம் என்பதே தோட்டக்கலை பொருள்கள் அறுவடை செய்த பிறகு ஏற்படுத்தும் இழப்பைத் தடுக்க ஒருங்கிணைக்கப்பட்ட பதப்படுத்தும் நிலையங்களை உருவாக்கி, மதிப்பு கூட்டப்பட்ட கட்டமைப்பின் மூலமாக விவசாயிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களிடம் பொருளைக் கொண்டு சேர்ப்பது வரை தடையின்றி விநியோகம் மேற்கொள்ளப்படும். 


உணவு பதப்படுத்தும் நிலையங்களை உருவாக்குவது, பெருக்குவது: இந்தத் திட்டத்தின் மூலம் உணவுப் பதப்படுத்துதலை அதிகரிப்பது, அதன் மதிப்பைப் பெருக்குவது, கழிவுகளைக் குறைப்பது முதலானவற்றை மேற்கொள்ள உணவு பதப்படுத்தும் நிலையங்களை உருவாக்குவது, பெருக்குவது, விரிவுபடுத்துவது முதலானவை மேற்கொள்ளப்படும். 



விவசாயப் பொருள்களைப் பதப்படுத்தும் நிலையங்களுக்கான கட்டமைப்பு: விவசாயப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கு அருகிலேயே உணவுப் பதப்படுத்தும் நிலையங்களை உருவாக்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கங்களுள் ஒன்று. 


முன்பக்க/ பின்பக்க இணைப்புகளை உருவாக்குவது: இந்தத் திட்டம் மூலமாக விவசாயம் மற்றும் தோட்டக்கலை பொருள்களை விவசாயிகளிடம் இருந்து பெறுவது முதல் முழு விநியோகமும் இந்த இணைப்புகளாகக் கருதப்பட்டு மேம்படுத்தப்படும். 


உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்யும் கட்டமைப்பு: இந்தத் திட்டத்தின் மூலமாக பதப்படுத்தப்படும் உணவுப் பொருளின் தரம் சர்வதேச விதிமுறைகளின்படி பரிசோதனை செய்யும் நவீன கட்டமைப்புகள் உருவாக்கப்படும். 


மனித வளம் மற்றும் நிறுவனங்கள்: இந்தத் திட்டத்தின் மூலம் ஆராய்ச்சித்துறையில் பெறப்படும் ஆய்வுகள் மூலமாக உணவுப் பதப்படுத்தும் துறையில் தேவையான முன்னேற்றங்கள் ஏற்படுத்த கட்டமைப்பு உருவாக்கப்படும்.