இருக்கண்குடி நீர்த்தேக்கத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்ட வட பகுதியின் ராபி பருவ பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் இருக்கண்குடியில் வைப்பாறு, அர்ச்சுனா ஆகிய இரு நதிகளின் குறுக்கே சுமார் ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் வைப்பாறு வடிநில கோட்டம் சார்பில் 24 அடி கொள்ளளவு கொண்ட நீர்தேக்கம் கடந்த 2004-ம் ஆண்டு கட்டப்பட்டது. விருதுநகர் மாவட்டம் இருக்கண்குடியில் நீர் தேக்கம், கட்டப்பட்டிருந்தாலும் அத்தண்ணீரின் பாசனத்துக்கான உரிமை கோவில்பட்டி கோட்டம் முத்துலாபுரம் குறுவட்டத்தில் உள்ள அயன் ராசாபட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, கீழ் நாட்டுக்குறிச்சி, சக்கிலிபட்டி, மேலக்கரந்தை, கீழக்கரந்தை, அயன்வடமலாபுரம், அச்சங்குளம் உள்ளிட்ட 11 கிராமங்களுக்கு உரியதாகும். இருக்கண்குடி நீர்த்தேக்கத்தில் இருந்து அயன் ராசாபட்டி, மாசார்பட்டி, அயன் வடமலாபுரம் வழியாக வேடபட்டி வரை விவசாய நிலங்களின் குறுக்கே சுமார் 6 மீட்டர் அகலத்தில் கால்வாய் வெட்டப்பட்டது.
இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டபோது, இந்த கிராமங்களில் உள்ள சுமார் 10,500 ஏக்கர் மானாவாரி நிலங்களில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்கவும், கீழ் நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம், மேலக்கரந்தை பாசன குளங்களுக்கு தண்ணீர் கொடுத்து நெல் சாகுபடியை அதிகரிக்கவும் நோக்கமாகும். விவசாயிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக இதுவரை ஒருமுறை கூட தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. மேலக்கரந்தையில் உள்ள பாசன குளத்துக்கு ஒருமுறை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால், கால்வாய் மேடாகிவிட்டால் குளத்துக்கு வந்த சேரவில்லை. எனவே, இந்தாண்டு ராபி பருவ பாசனத்துக்கு இருக்கண்குடி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, இருக்கண்குடி நீர்த்தேக்க திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது வறண்ட மானாவாரி கரிசல் பூமி வளம்பெறும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என அரசு தெரிவித்தது. முத்துலாபுரம் குறுவட்ட விவசாயிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திட்டம் காற்றில்லாத பலூனாக விட்டது. நீர்த்தேக்கத்தில் இருந்து பிரதான கால்வாய் அமைக்க சமதளத்தில் இருந்த நிலங்களில் குறுக்கே கால்வாய் தோண்டி இருபுறம் கரை அமைத்துவிட்டதால் மழைநீரின் வழித்தடம் மாறி விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இப்புதிய கால்வாயால் ஒருபுறமிருந்து மற்றொரு புறமுள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல பாலம் அமைக்கவில்லை. ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இத்திட்டம் விவசாயிகளுக்கு பயனின்றி காட்சிப்பொருளாகி விட்டது.
இருக்கண்குடி அணைக்கட்டு விருதுநகர் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் பாசன தண்ணீரின் பயன்பாடு விருதுநகர் மாவட்டத்திற்கு இல்லை என்பதால் அம்மாவட்ட ஆட்சியரும் கண்டு கொள்வதில்லை. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரும் கண்டுகொள்வதில்லை. இதனால் பாதிக்கப்படுவது முத்துலாபுரம் குறுவட்ட விவசாயிகளாவார்கள். தவிர பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைக்கட்டுகளால் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதி விவசாயிகள் பயனடைவதுபோல், இருக்கண்குடி அணைக்கட்டால் தூத்துக்குடி மாவட்ட வட பகுதி விவசாயிகள் பயனடைவார்கள். இருக்கண்குடி நீர்தேக்கத்தை இதுவரை பணிபுரிந்த எந்தவொரு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் பெயரளவிற்கு கூட பார்வையிட்டதும் இல்லை. பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு உண்டான ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை. பாசன தண்ணீரின் பயன்பாடு தூத்துக்குடி வடக்கு பகுதிக்கு தான். ஆனால், நீர்த்தேக்கம் கட்டியது முதல் இந்த 18 ஆண்டுகளில் ஒருமுறைகூட தண்ணீர் திறந்துவிட்டது கிடையாது.
ஆனால், பிரதான கால்வாயில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணி என்ற பெயரில் செலவு செய்யப்படுகிறது. பிரதான கால்வாயின் இருபுறம் உள்ள கரைமீது விவசாய நிலங்களுக்கு செல்லமுடியாத வகையில் வேலிக்கருவை மரங்கள் அடர்ந்து புதர்மண்டி வனமாக காட்சியளிக்கிறது. இதனால் கரை வழியாக நிலங்களுக்கு சென்று விவசாய பணியை மேற்கொள்ள முடியவில்லை. டிராக்டர்களும் செல்லமுடியவில்லை. முட்செடிகளை அகற்ற அதிகாரிகளிடம் தெரிவித்தால் எதையும் கண்டு கொள்வதில்லை. கால்வாயின் குறுக்கே பாலம் கட்டி இடதுபுறமிருந்து வலது புறமுள்ள நிலங்களுக்கு செல்ல பாலம் அமைத்து தர அதிகாரிகளிடம் கேட்டதற்கு நிதி ஆதாரம் இல்லை என தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்தி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்