உலகத்தில் வருங்காலங்களில் உணவு என்பது மாத்திரை வடிவில் வந்து விடும் எனவும், ஒவ்வொருவரும் மாத்திரையை விழுங்கி விட்டு செல்வார்கள் என பலராலும் நகைச்சுவையாக கூறப்பட்டு வந்தாலும், அது போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு சாத்தியக்கூறுகளே அதிகம் உள்ளது. அதற்கு உதாரணமாக தற்போது விவசாய முறையின் மாத்திரை வடிவெடுத்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவே நாற்று நடவு முறை மூலமே நெல் பயிரிடப்படுகிறது. ஆனால் தற்போது நெல்லை கேப்சூல் ஆக உருவாக்கி நடவு செய்யும் முறை அறிமுகமாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூரைச் சேர்ந்தவர் 51 வயதான ராஜசேகர். எம்.காம்., பி.எட்., டி.சி.ஏ., டிசிபிஏ., பி.ஜி.டி.சி.எம்., ஐசிடபிள்யூஏ, அக்ரிகல்சர் டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு பட்ட, பட்டயப் படிப்புகளை முடித்துள்ளார். பல்வேறு படிப்புகளை படித்திருந்தாலும், இவர் விரும்பி ஏற்றுக் கொண்டது தொழில் என்னவோ விவசாயம் மட்டுமே. இவருக்கு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அனந்தமங்கலம் ஊராட்சி கந்தமங்கலம் கிராமத்தில் தனக்கு சொந்தமான உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதில் கடந்த 5 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை கொண்டு இயற்கை விவசாயம் மேற்கொண்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு ஆகும். தனது வயலில் கருப்புக்கவுனி, சீரகசம்பா, தூயமல்லி, கருங்குறுவை, அறுபதாம் குறுவை, ரத்த சாலி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துவரும் விவசாயி ராஜசேகர், ஒவ்வொருமுறையும் புதுமையான முயற்சிகளை பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டு தனது ஒரு ஏக்கர் நிலத்தில் அறுபதாம் குறுவை நெல் ரகத்தை கேப்ஸ்யூல் முறையில் இவர் நடவு செய்துள்ளார். கடலைப்புண்ணாக்கு, இலுப்பை புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு மற்றும் பிளான்ட் பிரோமோட்டிங் கிரானுல்ஸ் ஆகியவற்றை 3:1:1:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து உரமாக்கி கொண்ட விவசாயி ராஜசேகர் அதனை ஒரு காப்சூலில் மூன்று விதைகளையும் சேர்த்து விதைக்கிறார். இதற்கான விதையை ஐசிஐசிஐ பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனத்திடம் இவர் பெற்றுள்ளார்.
பொதுவாக ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 30 கிலோ நெல் விதை தேவைப்படும் நிலையில், கேப்சூல் முறையில் நடவு செய்ய வெறும் இரண்டரை கிலோ விதைநெல் மட்டுமே போதுமானது என்றும், பொதுவாக 110 நாள் சாகுபடிக்கு தேவைப்படும் நிலையில் இந்த முறையில் நடவு செய்யும்போது 90 நாட்கள் மட்டுமே தேவைப்படும் மேலும் தண்ணீர் பற்றாக்குறையான இந்த காலகட்டத்தில் குறைவான தண்ணீர் மட்டும் போதும் என்கிறார் விவசாயி ராஜசேகர். விவசாயி ராஜசேகரின் புதுமையான இந்த முயற்சியை சக விவசாயிகள் ஆர்வமுடன் உற்றுநோக்கி வருவதுடன் பல விவசாயிகளுக்கு முன் மாதிரியாக திகழ்த்து வருகிறது.