பயிர்களுக்கு தேவையான பதினாறு சத்துக்களையும் அளவு அறிந்து அளிப்பது அபரிமிதமான விளைச்சலுக்கு அடித்தளம் ஆகும்.
நெல் பயிர் பல்லாயிரம் ஆண்டுகளாக உலகில் பல்வேறு நாடுகளில் யயரிடப்பட்டு வருகிறது உலக மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் நெல் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவு உற்பத்தி அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் சமச்சீர் உரமிட்டு உயர் விளைச்சல் பெற விவசாயிகள் முன் வர வேண்டும் என அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தரமான விதைகள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், பயிர் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு ஆகிய பயிர் மேலாண்மை முறைகளை திறம்பட நிர்வாகம் செய்வதன் மூலம் பயிர் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும். பொதுவாக பயிர்களுக்கு 16 வகையான சத்துக்கள் தேவை. இதில் கார்பன், நைட்ரஜன், ஹைட்ரஜன் ஆகிய மூன்று சத்துக்களும் காற்று மற்றும் தண்ணீரில் இருந்து கிடைக்கிறது.
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் கந்தகம் ஆகிய ஆறு பேரூட்டங்களும் அதிக அளவில் பயிர்கள் எடுத்துக் கொள்கிறது. குறைந்த அளவில் ஆனால் முக்கியமான நுண்ணூட்டங்களான துத்தநாகம், இரும்பு, போரான், மாங்கனிசு, தாமிரம், மாலிப்டினம், குளோரிக் ஆகிய ஏழு நுண்ணூட்டங்கள் உற்பத்திக்கு உறுதுணையான உரங்களாகும். மேற்கண்ட 16 வகை சத்துக்களில் 13 சத்துக்கள் ஒவ்வொரு பயிருக்கும் தேவையின் அளவு மாறுபடும். இந்த 13 சத்துக்களின் தேவை அளவு மண் ஆய்வு படி பயிருக்கு இடவேண்டும்.
நீண்ட காலமாக செய்யப்படும் தீவிர சாகுபடி முறைகளில் விளைநிலங்களில் பயிரூட்டங்களின் குறைபாடு ஏற்படுகிறது. மேலும் நாம் சமச்சீரான உரமிடாத போது பயிர்கள் மண்ணில் இருந்து பயிரூட்டங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறது. இதே நிலை நீடித்தால் மண்ணில் பயிரூட்டப் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்படும். நம் மண் வகைகளில் சாம்பல் சத்து இருப்பு ஓரளவுக்கு மிதமான நிலை முதல் அதிகமான நிலை வரை காணப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து நாம் சாம்பல் சத்தை உர நிர்வாகத்தில் இருந்து நீக்குவோமேயானால் பயிர் விளைச்சல் குறைதல்/ தரம் குறைந்த விளை பொருட்கள் உற்பத்தி மற்றும் குறைந்த வருமானம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். எனவே தழை மற்றும் மணிச்சத்து உரங்களுடன் பயிர்களுக்கு தேவையான சாம்பல் சத்தினையும் இடுவதே உயர் விளைச்சல் பெறுவதற்கும், மண்வளத்தினை நிலைப்படுத்துவதற்கும் ஏற்ற வழியாகும்.
தழைச்சத்து உரங்களுக்கு மானியம் அதிகளவில் வழங்கப்படுவதால் தழைச்சத்தை மட்டுமே விவசாயம் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் தழைச்சத்து மட்டுமோ அல்லது தழை மற்றும் மணிச்சத்துக்களை இடுவதால் கிடைக்கும் விளைச்சலை விட சாம்பல் சத்தை சேர்த்து விடும்போது கிடைக்கும் விளைச்சல் மிக அதிகமானது என்பது ஆராய்ச்சிகளின் முடிவாக உள்ளது.
பயிர் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்
கார்பன்: கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு மற்றும் நியூக்ளிக் அமிலம் இவைகளின் மூலக்கூறுகளாக உள்ளது.
ஆக்சிஜன்: தாவரத்தில் உள்ள அனைத்து அங்கக மூலக்கூறுகளிலும் உள்ளது.
ஹைட்ரஜன்: தாவரங்களில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றங்களில் முதன்மை பங்கு அயனிகளின் சமநிலைக்கு முக்கிய செல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது.
நைட்ரஜன்: புரோட்டின் முதல் நியூக்ளிக் அமில உற்பத்தி வரை முக்கிய பங்கு வகிக்கிறது.
பாஸ்பரஸ்: தாவரங்களுக்கு சக்தி கொடுப்பது மற்றும் புரதச்சத்து வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொட்டாசியம்: அயனி சத்துக்கள் மற்றும் தண்ணீர் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. பல்வேறு நொதிகளுக்கு கோபேக்டராகவும் ஆக்டிவேட்டராகவும் உள்ளது.
கால்சியம்: செல்கள் பிரிவது மற்றும் தாவரத்தில் உள்ள செல்களின் உறுதிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
மக்னீசியம்: பச்சையத்தின் உற்பத்திக்கும் மற்றும் பல வகை நொதிகளுக்கும் கோ பேக்டராகவும் உள்ளது.
இதே போல் சல்பர், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீசு உட்பட பதினாறு சத்துக்களும் பரிந்துரைப்படி இடுவதன் மூலம் மகசூல் பல மடங்கு உயர்ந்து பெருகிவரும் மக்கள் தொகைக்கு தேவையான உணவினை உற்பத்தி செய்திடவும் வளமான பெயரை நலமான சூழ்நிலையில் வளர்ப்பதன் மூலம் எதிர்பார்க்கும் லாபத்தை எட்ட முடியும்.