விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தில் இயற்கை விவசாயத்தின் மூலம் பயிரிடப்பட்டிருந்த பருத்தியை சுமிந்தர் இந்தியா ஆர்கானிக் நிறுவனத்தினர் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அதிக விலைக்கு கொள்முதல் செய்துள்ளனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கி வரும் சுமிந்தர் இந்தியா ஆர்கானிக்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், கடந்த 2 ஆண்டுகளாக தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து பயிற்சி அளித்து அவர்களுக்கு மரபணு மாற்றம்(GMO) இல்லாத நாட்டு விதைகளை இலவசமாக கொடுத்து இயற்கை முறையில் விவசாயத்தை மேற்கொள்ள செய்ததோடு மட்டுமன்றி, விவசாயிகள் விளைவித்த பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக இந்நிறுவனத்தின் சார்பிலே அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. 




அதன்படி, கடந்த ஆண்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு மரபணு மாற்றம் இல்லாத நாட்டு விதைகள் கொடுத்து நல்ல மகசூலை பெற்றுள்ளனர். அதேபோன்று இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நாட்டு பருத்தி விதைகளை கொடுத்து இரசாயன பூச்சி மருந்துகள் தெளிக்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வைத்ததில் முதற்கட்டமாக சோதனை முயற்சியில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது.


அவ்வாறு நன்கு இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு விளைந்த பருத்திகளை இன்று சுமிந்தர் இந்தியா ஆர்கானிக்ஸ் நிறுவனத்தினர் விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.82 என்றவாறு அதிக விலைக்கு நேரடியாக கொள்முதல் செய்துள்ளனர். தற்போது சந்தைகளில் பருத்தியானது கிலோ ரூ.57 மட்டுமே விற்பனை ஆகிவிடும் நிலையில், இடைத்தரகர்களின்றி நேரடியாக ரூ.82க்கு விவசாயிகளிடமிருந்தே அதிக விலைக்கு கொள்முதல் செய்ததால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 




மேலும், இதே போன்று வருங்காலங்களில் அனைத்து பயர்களையும் மரபணு மாற்றம் இல்லாத நாட்டு விதைகளைக் கொண்டு இயற்கை விவசாயத்தின் மூலமாக விவசாயம் செய்ய வைத்து விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க அனைத்து பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்யும் இந்நிகழ்ச்சியில் நிறுவன மண்டல மேலாளர் ஜெஸ்வின் மேத்யூ, திட்ட மேலாளர் டேவிட், களப்பணியாளர் கண்ணன், குருவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி செந்தில், கோடாங்கி பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி மற்றும் ஏராளமான விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்