மானாவாரி நிலத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள், மழையின்மை, படைப்புழு தாக்குதல் காரணமாக சேதமடைந்து வருகிறது. காப்பீட்டு தொகையை நம்பி பயனில்லை என்பதால், இயந்திரம் மூலம் பயிர்களை அழித்து கால்நடை தீவனத்துக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1.70 லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலத்தில் நிகழாண்டு புரட்டாசி ராபி பருவத்தில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், கம்பு, வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர். ஆவணி மாத இறுதியில் பயிரிடப்பட்டு ஐப்பசி மாதம் 10-ம் தேதி வரை பருவத்துக்கு மழை பெய்யாததால் அனைத்து பயிர்களும் பெயரளவில் தான் வளர்ந்திருந்தன. இதனால் போதிய வளர்ச்சி இன்றியும் தெம்பின்றியும் பயிர்கள் காணப்படுகின்றன. மழையில்லாததால், மக்காச்சோளம் பயிர்களில் படைப்புழு தாக்குதல் அதிகமாக இருப்பதால், பயிர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. இதனால் பயிர்கள் பச்சை தண்டுடன் இருக்கும்போதே மக்காச்சோள பயிர்களை கால்நடை தீவனத்துக்கு விற்பனை செய்தால் ஓரளவு நஷ்டத்தை குறைக்கலாம் என்ற எண்ணத்தில் விவசாயிகள், தற்போது இயந்திரம் மூலம் பயிர்களை அறுத்து, டாரஸ் லாரியில் ஏற்றி வருகின்றனர்.
இதுகுறித்து எட்டயபுரம் அருகே குமாரகிரியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், போன வருஷமும், அதற்கு முந்தைய வருஷமும் மக்காச்சோளத்தில் பாதிப்பு இருந்தது. காப்பீடு செய்த பணம் வரும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், இதுவரை காப்பீடு பணம் கைவந்து சேரவில்லை. வெள்ளாமையும் வீடு சேரவில்லை. வீட்டில் இருந்த பணம் விரயமானது தான் மிச்சம். இந்தாண்டும் மழையின்றி படைப்புழு அதிகமாக இருப்பதால் மக்காச்சோள பயிர்கள் வாடி போய் உள்ளது. இதனை அப்படியே விட்டால் எதற்கு உதவாம வீணாகிவிடும். காப்பீட்டு தொகையை நம்பி எந்தவித பிரயோஜனமும் இல்லை. அதிகாரிகளுக்கும் எங்கள் கஷ்டம் புரியபோவதில்ல. இதனால் நஷ்ட பணத்துல கொஞ்சமாவது கிடைக்குமேனு, ஓரளவு பச்சையா இருக்கும்போதே கால்நடை தீவனத்துக்கு விற்றுவிடலாம் என இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, மழையும் கைவிட்டுவிட்டது. படைப்புழு தாக்குதல். முன் எப்போதும் இல்லாத வகையில் பயிர்களை மான், பன்றிகளால் சேதம். மத்திய அரசின் தேசிய ஊரக வேலை திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, பயிர்களை தாக்கும் குருத்துப்பூச்சி என பல்வேறு இடர்பாடுகளால் விவசாயிகள் சிக்கி தவித்து வருகின்றனர். மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் செலவு செய்துவிட்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இப்படியே விட்டால், ஏக்கருக்கு 5 குவிண்டால் கிடைப்பதே அரிதாகிவிடும். அதற்கும் அறுவடை செய்ய ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் தேவைப்படும். நிலத்தில் பயிர் பச்சை தண்டுடன் பால் கோத்த பருவத்தில் அரைத்து கால்நடை தீவனத்துக்கு ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்து விலைக்கு வாங்குகின்றனர். விவசாயிகள் வேறு வழியின்றி விற்பனை செய்து வருகின்றனர். கால்நடை தீவன நிறுவனத்தினர் நிலத்தில் இருந்தபடியே இயந்திரம் மூலம் பச்சை தண்டுடன் இருக்கும் மக்காச்சோள பயிர்களை அரைத்து டாரஸ் லாரியில் ஏற்றி கொண்டு செல்கின்றனர். அவர்கள் ஒரு டன் ரூ.2,250 வரை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட பயிர் காப்பீடும் முறையாக வழங்கப்படவில்லை. நிலத்தில் முளைத்த ஆள் உயர பயிரை இயந்திரங்கள் வெட்டும் போது மனம் கலங்குகிறது. செய்த செலவில் ஓரளவாவது ஈடுகட்ட முடியுமா என்று கருத வேண்டியுள்ளது. ஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு வேறு வழி தெரியவில்லை. 2021- 2022-ம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீட்டை உடனடியாக விடுவிக்க வேண்டும். அரசு விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கி உதவ வேண்டும் என்றார்.