பாப்பிரெட்டிப்பட்டி அருகே மரத்தில் ஏறி 200 கிலோ பாக்குகளை திருடிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

 

 தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாமியாபுரம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த கோபிநாத்( 48) என்பவர் சேலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். தனக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில், 2 ஏக்கர் பரப்பளவில் பாக்கு, தென்னந்தோப்பு வைத்துள்ளார்.  இந்தநிலையில்  என்ஜினீயர் கோபிநாத்தின் தாய் பார்வதி பாக்கு தோப்புக்கு சென்றுள்ளார்.  அப்போது பாக்கு மரத்தில் ஏறி சிலர் பாக்குகளை திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்வதி சத்தம் போட்டுள்ளார்.

 



 

 

இதனால் மர்ம நபர்கள் பாக்குகளை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கோபிநாத் புகார் அளித்தார். அதில் தனது தோட்டத்தில் உள்ள பாக்கு மரங்களில் 200 கிலோ பாக்குகள் திருடப்பட்டதாக கூறி இருந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பட்டுக்கோணாம்பட்டியை சேர்ந்த மகாராஜன் (47), பசுபதி (33) ஆகிய இருவரும் பாக்குகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். மேலும் பாக்கு திருட்டில் தொடர்புடைய மேலும் சிலரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.


 



 

 

 

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்  இயங்கி வரும் தனியார் ஸ்டார்ச் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் இரசாயன கழிவுகளால் அந்தப் பகுதியில் விவசாயம் செய்யப்பட்ட கரும்புகள் வேரோடு  காய்ந்து வருவதால் விவசாயி வேதனை அடைந்துள்ளனர்.

 



 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்  இயங்கி வரும் தனியார் ஸ்டார்ச் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படும் இரசாயன கழிவுகள் பீனியாற்றில் நேரடியாக விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள அதிகாரப்பட்டி ஏரி, ஏ.பள்ளிபட்டி ஏரி, சின்னேரி, பெரியேரி உள்ளிட்ட ஏரிகளில் நிரம்பி வாணியாற்றின் வழியாக செல்கிறது. இதில் தற்போது பெரிய ஏரியில் இருந்து சின்ன ஏரிக்கு தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர் மாசடைத்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 



 

இதனால் பல வருடங்களாக, ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் புகார் அளித்து வந்தனர்.  தற்பொழுது அந்த பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தில் ரசாயனம் கலந்த நீர் உள்ளே புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு, அழிந்து வேரோடு காய்ந்து வருகிறது. மேலும் இந்த சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் அழித்து வருகிறது. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனையடுத்துள்ளார். மேலும் பீனியாறு பாதுகாப்பு மீட்பு குழு விவசாயிகள் மூலம் அனைத்து மக்களுக்கும் ரசாயன கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோன்று தனது 4 ஏக்கர் கரும்பு  காய்ந்து விட்டதால், வருவாய் துறையினர் முறையாக ஆய்வு செய்து, பாதிப்புக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.