தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பள்ளம், உடன்குடி, சிவத்தையாபுரம், குலையன்கரிசல், ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக வாழை இலைகள் கொண்டு வரப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் வாழை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. வாழைத் தோட்டங்களுக்கு கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை பாய்ச்சி விவசாயிகள், வாழைப்பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.




தூத்துக்குடி வாழைக்காய் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் வாழைத்தார் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை தொழில் முதன்மையானது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் நடைபெறும். இந்த ஆண்டு பருவமழை பெய்யாததன் காரணமாக வாழை விவசாயத்திற்கு தேவையான நீர் இல்லாத காரணத்தால் சரியான விளைச்சல் இல்லாமல் காணப்படுகிறது.




இதன் காரணமாக தூத்துக்குடி வாழைக்காய் மார்க்கெட்டுக்கு ஆத்தூர், குரும்பூர், பரமன்குறிச்சி, அம்மன் புரம், காயாமொழி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் வருகின்றன. செவ்வாழை தார் தேனி மாவட்டத்தில் இருந்து வருகிறது. வழக்கமாக தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு 3000 முதல் 3500 தார்கள் வரக்கூடிய நிலையில் மழை இல்லாத காரணத்தால் 800 முதல் 1000 வாழைத்தார்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி வாழைக்காய் மார்க்கெட்டில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.




செவ்வாழை தார் – ரூ.1000-லிருந்து ரூ.1,400 வரை விலை உயர்ந்துள்ளது. நாட்டுபழத்தார் ரூ.800 முதல் ரூ.1,200 வரை, கோழிக்கூடு, கற்பூரவள்ளி போன்ற வாழைத்தார்கள் ரூ.550 முதல் ரூ.800 வரை விலை உயர்ந்துள்ளது. வாழைத்தார்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வாழைத்தார்கள் விளைச்சல் இல்லாமல் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.




தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பள்ளம், உடன்குடி, சிவத்தையாபுரம், குலையன்கரிசல், ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக வாழை இலைகள் கொண்டு வரப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய அளவு பருவமழை பெய்யாததால் வாழை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. வாழைத் தோட்டங்களுக்கு கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை பாய்ச்சி விவசாயிகள், வாழைப்பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். இதனால் தூத்துக்குடியில் வாழை இலை தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு தினமும் 600 வாழை இலைக்கட்டுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தற்போது 350 வாழை இலைக்கட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வந்து உள்ளன. இதனால் தட்டுப்பாடு உருவாகி உள்ளது.




அதே நேரத்தில் ஆவணி மாதத்தில் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும். இதனால் வாழை இலை தேவையும் அதிகரித்து உள்ளது. இதனை சமாளிக்க வியாபாரிகள் தஞ்சை, தாராபுரம், உடுமலைபேட்டை ஆகிய இடங்களில் வாழை இலைக்கட்டுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மார்க்கெட்டில் இலைக்கட்டு விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. வழக்கமாக மார்க்கெட்டில் சிறிய வாழை இலைக்கட்டுகள் ரூ. 1000 முதல் ரூ.1,500 வரையும், பெரிய வாழை இலைக்கட்டுகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டு வந்தன.


தற்போது தட்டுப்பாடு உருவாகியுள்ள நிலையில் மார்க்கெட்டில் சிறிய வாழை இலைக்கட்டுகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையும், பெரிய வாழை இலைக்கட்டுகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் மக்கள் வாழை இலைகளை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.