பயிர்களை சேதப்படுத்தி அழித்து வரும் பன்றிகளை வரும் பருவ மழைக்கு முன்னர் அரசு கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?

Continues below advertisement




தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் ஓர் ஆண்டில் புரட்டாசி முதல் மாசி வரை மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 6 மாதங்களில் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். சில விவசாயிகள் தங்களது நிலத்தில் கோடை உழவு, ஆடு கிடை போடுதல், காய்ந்த மற்றும் தேவையற்ற செடிகளை அகற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் இரவு நேரங்களில் பன்றிகள் மற்றும் மான்கள் நிலங்களில் விளைந்து இருக்கும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பெரும்பாலான கிராமங்களில் குளம், குட்டைகளில் பன்றிகள் அதிகம் இருந்து வருகிறது. இவை இரவு நேரங்களில் விளை நிலங்களில் உள்ள உளுந்து, பாசிபயிர், கம்பு, மக்காச்சோளம், வெள்ளை சோளம், கொத்தமல்லி போன்ற பயிர்களை சேதப்படுத்தியும் தின்றும் வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்து உள்ளனர். இதனால் விவசாயிகள் பகலெல்லாம் நிலத்தில் வேலை செய்துவிட்டு, இரவில் பன்றி மற்றும் மான்களிடமிருந்து பயிர்களை காப்பாற்ற பேட்டரியுடன் கூடிய சிறிய கையடக்க கூம்பு வடிவ குழாய் ஒலிபெருக்கியில் நாய் சத்தத்தை பதிவு செய்து இசைத்து விரட்டி அடிக்கின்றனர். இருப்பினும் பன்றிகளை கட்டுபடுத்த முடியவில்லை.பயிர்களை குழந்தை போல் வளர்த்து ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்து, மருந்து கொடுத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளுக்கு புதிய வடிவத்தில் பன்றிகளால் பெரும் தொல்லை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த இயலாத நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.




இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, "கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயத்திற்கு மத்திய மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து பயிர் காப்பீடு, நிவாரணம் வழங்கியது. இதனால் தரிசு நிலங்கள் பரப்பு குறைந்து சாகுபடி பரப்பு அதிகரித்தது. இந்நிலையில் மகசூலை முழுமையாக சேதப்படுத்தி பெரும் நஸ்டத்தை ஏற்படுத்தி வரும் பன்றிகளை அரசு கட்டுப்படுத்தவில்லை. இதனால் விவசாயிகள் வரக்கூடிய பருவ ஆண்டில் விவசாயம் செய்ய ஆர்வமின்றி உள்ளனர்.தவிர ஆறுகள் குளங்கள், குட்டைகள், ஊரணிகள் என மறைவிடத்தில் வாழும் பன்றிகளை விவசாயிகள் தங்களது சொந்த செலவில் முடிந்தளவு வேட்டையாடினர் ஆயினும் ஓராண்டுக்குள் பன்றிகள் இனப்பெருக்கம் பல மடங்கு அதிகரித்து வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,மாடுகளை போல் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிகிறது. இதனால் விவசாயிகள் கவலையாக உள்ளனர்.பன்றிகளை கட்டுப்படுத்த வரக்கூடிய பருவ காலத்திற்கு முன்னர் கட்டுபடுத்த வேண்டும். இல்லையேல் விவசாயத்தை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை. எனவே அரசு விவசாயிகள் நலன்கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்.