தஞ்சாவூர்: வரும் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 5 வரை தஞ்சை மாவட்டத்தில் எண்ணெய் பனை கன்று நடவு விழா நடக்கிறது என்று தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேசிய சமையல் எண்ணெய் - எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 8 ஹெக்டர் அளவில் புதிய பரப்பு விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. அதுபோன்று இந்த ஆண்டும் தேசிய சமையல் எண்ணெய் - எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 20 ஹெக்டர் அளவில் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலக்கினை 75 சதவீதம் சாதனை அடையும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் பனை இயக்கம் திட்டத்தின் கீழ் மாபெரும் எண்ணெய் பனை கன்று நடவு விழா வரும் 25ம் தேதி முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த மாபெரும் விழாவில் மாவட்ட கலெக்டர் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
எண்ணெய் பனை பயிரானது நடவு செய்ததிலிருந்து மூன்று ஆண்டுகளில் மகசூல் தரவல்லது. எண்ணெய் பனை நடவு செய்வதற்கு களி கலந்த மணல் அல்லது செம்மண் கலந்த மணல் பகுதி மற்றும் நல்ல நீர் வசதி மிக்க பகுதி ஏற்றதாகும். ஒரு ஹெக்டேருக்கு 20 லிருந்து 25 டன் அளவு வரை எண்ணெய் பனை குலைகள் அறுவடை செய்யப்படுகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை குலைகள் அரசு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் வரை அரசு அங்கீகாரம் பெற்ற கோத்ரெஜ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படாது.
தற்போது நடைபெற உள்ள இந்த விழாவில் பங்கேற்று மானியம் பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அசல் அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, வயல் வரைபடம் மற்றும் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்தும் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் இந்த எண்ணெய் பனை நடவு விழாவில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் தஞ்சாவூர், பூதலூர் -9943422198, ஒரத்தநாடு, திருவோணம் -9488945801, பட்டுக்கோட்டை, மதுக்கூர் - 6374921241, கும்பகோணம் , திருவிடைமருதூர் ,திருப்பனந்தாள் - 9842569664, பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு - 7539940657, பேராவூரணி , சேதுபாவாசத்திரம் -8903431728 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.