கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி ஊரே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

 

குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை கணபதி ஹோமம், அபிஷேகம், ஸ்ரீமத் பாகவத பாராயணம் அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலையில் அத்தாழ பூஜை, தீபாராதனையும் கும்ப கலசத்தில் வராகு தானியங்கள் நிறைக்கும் பணியும் நடந்தது. மாலையில் வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா அருளுரை வழங்கினார். அதைத்தொடர்ந்து பரத நாட்டியம் நடந்தது. நேற்று காலையில் இருந்தே கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து சாமியை தரிசனம் செய்தனர்.

 

இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் திருவட்டார் கோவிலுக்கு வந்து ஆய்வு நடத்தினார்கள். நேற்று ஆதிகேசவ பெருமாளுக்கு அணிவிக்க, வேளுக்குடி கிருஷ்ணசாமி ரூ.5 லட்சம் மதிப்பிலான வெள்ளியில் செய்யப்பட்ட தங்க முலாம் பூசிய இரண்டு திருப்பாதங்களை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.



 

 

இன்று அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமமும், 5.10 மணிக்கு ஜீவ கலச அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 11 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. மாலை 5 மணிக்கு பகவதி சேவை, அத்தாழ பூஜையும், 6 மணிக்கு லட்சதீபம், 6.30 மணிக்கு விளக்கனி மாடத்தில் விளக்கேற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. 



 

கும்பாபிஷேகத்தையொட்டி திருவட்டாரில் மின்னொளியில் ஆதிகேசவ பெருமாள் உருவம் மற்றும் மரங்களில் வண்ண-வண்ண மின்விளக்குகள் என நகரமே திருவிழாக்கோலம் பூண்டது. கும்பாபிஷேகம் அதிகாலையில் நடைபெற்ற நிலையில் அதை காண்பதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமானவர்கள் நேற்று இரவே திருவட்டாரில் திரண்டனர்.  கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண வசதியாக திருவட்டாரில் ஆங்காங்கே அகன்ற திரை டிவி வைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி குமரி மாவட்ட போலீசார் மட்டுமல்லாமல் நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த போலீசார் உள்பட 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருவட்டாருக்கு சிறப்பு பஸ்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இயக்கப்படுகிறது.