காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டு இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணையில் இருந்தது தண்ணீர் திறந்து விடப்படும். இந்த வருடம் 75 ஆண்டுகளுக்கு பிறகு மே 24ல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 132 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில் திருமாளம் சக்கர கொத்தங்குடி மேணாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நெற்பயிர் அறுவடை செய்த விவசாயிகள் அந்தப் பகுதியில் உள்ள கோவில் திருமாளம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத காரணத்தினால் தங்களது நெல் மூட்டைகளை கோவில்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலைய வாயிலிலும் அடுக்கி வைத்து காத்திருக்கக்கூடிய அவல நிலை காணப்படுகிறது. ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 15 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில்அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் அறுவடை செய்து 15 நாட்களாக கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருப்பதால் மழை பெய்தால் மீண்டும் நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை நிலவும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த வருடம் குறுவை நெருப்பை சாகுபடிக்கு பயிர் காப்பீடு தமிழக அரசு அறிவிக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு பெற முடியாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாதது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் உடனே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.