திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 8000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.


காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் பருவமழை பெய்தது போனதன் காரணத்தினாலும் மூன்று போக சாகுபடி என்பது ஒருபோக சாகுபடியாக மாறியது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணத்தினால் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி என்பது நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். 




இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை என்பது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வந்தது. குறிப்பாக நேற்று மாலை முதல் இரவு வரை இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இந்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 8000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன. குறிப்பாக நன்னிலம் பூந்தோட்டம் மருதவாஞ்சேரி வலங்கைமான் கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக நெல்மணிகள் வயலில் கொட்டி மீண்டும் முளைக்கின்ற அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. வயலில் அறுவடை இயந்திரம் இறங்கி நெல்மணிகளை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 




சென்ற வருடமும் இந்த வருடமும் குறுவை நெற்பயிர் சாகுபடிக்கு பயிர் காப்பீடு என்பதை தமிழக அரசு அறிவிக்கவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்த குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீட்டை விவசாயிகள் பெறுவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. குறுவை சாகுபடிக்காக செலவு செய்த தொகையை கூட விவசாயிகள் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்து கணக்கெடுத்து பாதிப்புக்கு தகுந்தாற் போல் குறுவை நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றால் இந்த ஆண்டு அடுத்த கட்ட சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படும். ஆகையால் தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருதி உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.