நெற்பயிர் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாள். எனவே கடைசி நாள் வரை இல்லாமல் விவசாயிகள் அனைவரும் உடன் பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என்று வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமார் 35000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் பயிரிடப்பட்டு வருகின்றது. விவசாயிகள் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெற்பயிரை காப்பீடு செய்ய வேளாண் உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் வரும் பயிர் மகசூல் இழப்பிலிருந்து காத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக பதிவு செய்ய இயலும்.
கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய வரும் 15 கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் நெற்பயிரினை மேற்கண்ட ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் காப்பீடு செய்தால் போதுமானது.
பயிர் காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.539 செலுத்த வேண்டும். விவசாயிகள் காப்பீடு செய்யும் பொழுது முன்மொழிவு படிவத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் தெளிவான முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து அளிக்க வேண்டும். கட்டணத் தொகையை செலுத்திய பின்பு அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக்கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
இயற்கை இடர்பாடுகளை யாராலும் கணிக்க இயலாது என்பதால் விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன் கூட்டியே காப்பீடு செய்து கடைசி நேரத்தில் பதிவு செய்வதில் ஏற்படும் பல்வேறு சிரமங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த குறுவை பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்யப்படாத நிலையில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் காப்பீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் 15ம் தேதி குவிந்து விடுவார்கள் என்பதால் பயிர் காப்பீடு செய்யப்படும் இணையதளம் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு காப்பீடு செய்ய இயலாத நிலை உருவாகும் என்பதால் முன்கூட்டியே இதை செய்து கொள்ள வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.