தேவைக்கு ஏற்ப பணம் கொடுக்கும் தேக்கு சாகுபடி. விவசாயிகளின் கூடுதல் வருமானத்திற்கு உதவும் தேக்கு மரம். காவிரி டெல்டாவில் கண்ட இடங்களிலும் கணக்கில்லாமல் வளரும் தேக்கு மரம்.
தேக்கு மரம் தென் ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உரியது. தேக்கு உயரமாக வளர்வதுடன் மிகவும் உறுதியானதுமாகும். உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாகும். தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளா மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் வளர்கிறது.
தெய்வத்தால் ஆகாது எனினும் தேக்கு தன் வளர்ப்புக்கு ஏற்ப காசு தரும் என்று விவசாயிகள் உள்ளம் குளிர வருமானத்தை அள்ளித்தரும். வேளாண்மையுடன் மரங்களை நடுவது வேளாண் காடுகள் எனவும், சில்விகல்சர் எனவும் அழைக்கப்படுகிறது. இதனால் காற்று மாசுபடுவது தடுக்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பதன் மூலமாக மூலப்பொருட்களின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே மண் வளம் அதிகம் உள்ள காவிரி டெல்டா பாசனப்பகுதியில் வாய்ப்புள்ள இடங்களில் தேக்கு மரங்களை பயிர் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என தஞ்சை வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.
மரம் வளர்ப்பதன் மூலம் மனிதன் வெளிவிடும் கரியமில வாயுவினை உட்கொண்டு மனித குலம் வாழ தேவையான பிராண வாயுவினை வெளியிடுகிறது. இதன் மூலம் காற்றை சுத்தப்படுத்தும் கருவியாக மரம் செயல்படுகிறது. விவசாய நிலங்களில் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் கருவியாகும், மரங்கள் செயல்பட்டு மழை பெய்ய வைக்கும் மந்திரவாதியாகவும் உள்ளது என்றால் மிகை இல்லை.
கூடுதலாக மண்வளம் காக்கவும், காற்றில் ஈரப்பதத்தை காக்கவும், ஆரோக்கியமான தட்பவெட்ப நிலையை நிலை நிறுத்தவும் மரங்கள் பயன்படுகிறது. மரம் வளர்ப்பவர்களுக்கு கரம் வளர்க்கும் கடின மரம் தேக்கு என்றால் மிகையாகாது.
தேக்கு மரத்தின் விஞ்ஞான பெயர் டெக்டோனியா கிராண்டிஸ். இது வெர்பனேசியே குடும்பத்தை சேர்ந்தது. தரைமட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. வருடத்திற்கு ஆயிரம் முதல் 5000 மில்லி மீட்டர் வரை மழை பொழியக்கூடிய இடங்களில் வேகமாக வளரும். ஆழமான மண் வகை கொண்ட செழிப்பான மண்படுகைகளில் மளமளவென வளரும். காவிரி டெல்டா பகுதியான நீடாமங்கலம் அருகில் மூணாறு தலைப்பில் முதன்முதலாக நடப்பட்ட தேக்கு மரம் இன்றும் காட்சியளித்துக் கொண்டு உள்ளதை பார்க்கலாம்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை பூப்பூத்து மே முதல் ஜூலை வரை விதைகளை தரக்கூடியது. மேட்டுப்பாத்தியில் விதைத்து ஒருநாள் ஈரமாகவும், மறுநாள் காய்ந்தும் 14 நாட்கள் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். விதைகள் மூன்றாவது வாரத்தில் முளைக்கத் துவங்கும். 12 மாத கன்றினை எடுத்து நடவு செய்யலாம்.
தண்டுப்பகுதி 2.5 சென்டிமீட்டர் நீளம் வைத்து வெட்டி விட வேண்டும். கிழங்கு மற்றும் வேர்ப்பகுதி 22.5 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். ஒரு அடி ஆழம், ஒரு அடி அகலம், ஒரு அடி நீளம் குழி எடுத்து இரண்டு மீட்டருக்கு இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். ஒரு குழிக்கு இரண்டு கிலோ தொழு உரம் மற்றும் 100 கிராம் டிஏபி கலங்து இட வேண்டும். நடவு செய்ய செப்டம்பர், அக்டோபர் மாதம் சிறந்தது.
தேக்கிற்கு ஏழு முதல் பத்து நாட்கள் இடைவெளியில் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும். விரைவான வளர்ச்சிக்கு சொட்டுநீர் பாசனம் சிறந்தது. மூன்று மாதத்தில் களை எடுக்க வேண்டும். ஆறு மாசத்துக்கு ஒரு முறை கட்டாயம் கவாத்து செய்ய வேண்டும். 4,8,12, 18, 26, 36 ஆண்டுகளில் இடைவெளியை களைய வேண்டும். சாதாரணமாக ஒரு ஆண்டில் வேகமாக வளரும். நல்ல பாசனம் உள்ள இடங்களில் 20 ஆண்டுகள் வரையிலும், வயல் வரப்புகளில் 15 ஆண்டுகள் வரை வளர்க்கலாம்.
தேக்கு மரம் மிகவும் அழுத்தமான மர வகையை சேர்ந்தது. இதன் அடர்த்தி 60 கிலோ- மீ3. இதனால் தொழிற்சாலைகளிலும், வீட்டு உபயோக பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அபரிமிதமான ஆதாயத்தை பெற வீடுகள், வயல்கள், வீதிகள் தோறும் தேக்கு மரத்தை நடுவோம். தேச வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் தேவைக்கு ஏற்ப பணம் கொடுக்கும் தேக்கு சாகுபடி..!
என்.நாகராஜன்
Updated at:
23 Sep 2022 05:25 PM (IST)
விவசாயிகளின் கூடுதல் வருமானத்திற்கு உதவும் தேக்கு மரம். காவிரி டெல்டாவில் கண்ட இடங்களிலும் கணக்கில்லாமல் வளரும் தேக்கு மரம்.
தேக்கு மரம்
NEXT
PREV
Published at:
23 Sep 2022 05:25 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -