தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. டிசம்பர் மாதம் சராசரியாக 108.02 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 49.68 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இதனால் நடப்பாண்டு சம்பா மற்றும் தாளடி சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. 


தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை இலக்காக 1.96 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிடாததால், காவிரியில் போதுமான அளவுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால், காவிரி தண்ணீரை நம்பி சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 முதல் 15 மூட்டைகள் மகசூல் குறைவாகவே கிடைத்தது. இது விவசாயிகளுக்கு பெரிய அளவில் வேதனையை ஏற்படுத்தியது. இதேபோல, ஆழ்குழாய் மோட்டார் பம்ப்செட் மூலம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கும் பருவ நிலை மாற்றம் காரணமாக புகையான், குருத்துப்பூச்சி தாக்குதல், வேரழுகல் நோயால் விளைச்சலில் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 




இதனிடையே, மேட்டூர் அணையில் போதிய அளவுக்கு நீர் இருப்பு இல்லாததால், அக்டோபர் 10 ஆம் தேதி அணை மூடப்பட்டது. வடகிழக்கு பருவ மழையை நம்பி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடியை விவசாயிகள் தொடங்கி மேற்கொண்டனர் ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 3.45 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2.96 லட்சம் ஏக்கரில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பரப்பு குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


போதிய அளவுக்கு மழை இல்லாத நிலையில் சம்பா, தாளடி பயிர்களில் இலைசுருட்டுப் புழு, குருத்துப்பூச்சி, எலி தாக்குதல் என பல்வேறு இயற்கை இடர்பாடுகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். முக்கியமாக மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் இலைசுருட்டுப் புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இது விவசாயிகளிடையே மிகுந்த அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.


சம்பா, தாளடி பயிர்கள் தற்போது தண்டு உருளும் பருவத்தில் உள்ளன. பயிர் தோகைகளில் தாய் அந்துப்பூச்சி முட்டையிடுதல் பரவலாக இருந்தது. அடுத்த இரு நாள்களில் மழை பெய்திருந்தால், அதனுடன் சேர்த்து முட்டைகளும் அடித்துச் சென்றிருக்கும். ஆனால், போதிய அளவுக்கு மழை பெய்யாத நிலையில், பகலிலும் வெயில் இல்லாமல் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், அவையெல்லாம் புழுவாக மாறிவிட்டன. இதனால், இலைகளில் இப்புழுக்கள் சுருட்டி உட்கார்ந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டி சாப்பிடுகிறது. டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இந்தப் பாதிப்பு காணப்படுகிறது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


இதுதொடர்பாக வேளாண் துறையினர் பரிந்துரைத்த பூச்சி கொல்லி மருந்துகளை வாங்கித் தெளித்தபோதும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மகசூல் இழப்பு 50 சதவீதம் அளவுக்கு ஏற்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. மாவட்டத்தில் டிசம்பர் மாதம் சராசரியாக 108.02 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், 49.68 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. நடப்பாண்டு தென் மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், ஆண்டு சராசரி மழையளவான 1,098.4 மி.மீ.}க்கு பதிலாக இதுவரை 913.26 மி.மீ. மட்டுமே பெய்தது. இதனால், நடப்பாண்டு இதுவரை மழையளவு 184.98 மி.மீ. குறைவாகப் பதிவாகியுள்ளது.