தஞ்சாவூர்: கை கொடுக்கும் என்று நினைத்தால் காலை வாரிவிட்டு விட்டதே என்று வேதனையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கின்றனர் விவசாயிகள். எதற்காக தெரியுங்களா?


தஞ்சாவூர் மாவட்டத்தில் எப்போதும் ஆந்திரா பொன்னி ரக நெல்லை அதிக விலை கொடுத்து வாங்கும் தனியார் வியாபாரிகள் நடப்பாண்டு விவசாயிகள் எதிர்பார்க்காத வகையில் குறைந்த விலைக்கு கேட்பதால், பெரும்பாலான விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் தேடிச் செல்கின்றனர்.


தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரையில் சம்பா, தாளடி பருவத்தில் கணிசமான அளவுக்கு சன்ன ரகமான பிபிடி 5204 என்கிற ஆந்திரா பொன்னியை விவசாயிகள் பயிரிடுவது வழக்கம். காரணம் இதற்கு இருக்கும் மவுசுதான். இந்த ரகத்தை பெரும்பாலும் தனியார் வியாபாரிகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கிச் செல்வதால், வாய்ப்புள்ள விவசாயிகள் இந்த ரகத்தை பயிரிடுவர். பயிரிட்டோமா, அறுவடை செய்தோமோ வியாபாரிகளிடம் உடனே விற்றோமா என்று விவசாயிகள் இருந்து வந்தனர்.


ஆனால் நடப்பாண்டில் விவசாயிகளுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. முன் பட்டத்தில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் நவம்பர் இறுதி வாரம், டிசம்பர் இரண்டாவது வாரம் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டன. பருவம் தவறி பெய்த மழையால் பால் பிடிக்கும் தருணத்தில் மகரந்த சேர்க்கை ஏற்படாமலும், பூ பூக்காமலும் கதிர்கள் வெளியே வரவில்லை. மேலும், வெயில் இல்லாததாலும், கடும் பனிப்பொழிவாலும் குருத்துப்பூச்சி, தோகை பூச்சி போன்ற பூச்சித் தாக்குதல்கள் மற்றும் இலை உறை அழுகல் நோய், ஆணைக்கொம்பன் நோய், வேரழுகல் நோய், குலை நோய், நெல்பழ நோய் போன்ற பாதிப்புகளாலும் நெற் பயிர்கள் சேதமடைந்தன. இதனால், ஏக்கருக்கு குறைந்தது 30 மூட்டைகள் மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், 18 முதல் 24 மூட்டைகள் மட்டுமே கிடைக்கின்றன. இந்தநிலையில் ஆந்திரா பொன்னி ரகத்தை வாங்க தனியார் வியாபாரிகளும் மிகக் குறைவாகவே முன்வந்துள்ளனர்.  இதற்கு விலை குறைந்துள்ளது என்று காரணம் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த ரக நெல்லை சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். 


இதுகுறித்து தெற்குகோட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு அறுவடை பருவ தொடக்கத்தில் ஆந்திரா பொன்னிக்கு 60 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரூ. 1,750 வரை விலை கிடைத்தது. அறுவடை பரவலான பிறகு ரூ. 1,600 ஆக குறைந்தாலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விட, மூட்டைக்கு குறைந்தபட்சம் ரூ. 300 கூடுதலாக கிடைத்தது. இதனால், கடந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் சன்ன ரகங்களை தனியாரிடமே விற்பனை செய்தோம்.


ஆனால் இந்தாண்டு அறுவடை தொடக்க நிலையிலேயே 60 கிலோ மூட்டைக்கு ரூ. 1,300 முதல் ரூ. 1,350 வரை மட்டுமே விலை போகிறது. இந்தக் குறைந்த விலையில் வாங்குவதற்கும் தனியார் வியாபாரிகள் முன்வரவில்லை. இதே சன்ன ரக 60 கிலோ மூட்டைக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ. 1,470 விலை கிடைக்கிறது. அங்கு மூட்டைக்கு 2 கிலோ நெல் பிடித்தம், மூட்டைக்கு ரூ. 50 முதல் 60 வரை லஞ்சம் போன்ற முறைகேடுகள் இருந்தாலும், விவசாயிகள் வேறு வழியின்றி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கே செல்கின்றனர் என்று  வேதனையுடன் தெரிவித்தனர். 


இதேபோல, ஆந்திரா பொன்னிக்கு அடுத்து தனியாரிடம் அதிகம் விற்பனையாகும் கல்ச்சர் என்கிற ஏடிடி 39, ஏடிடி 42 போன்ற சன்ன ரகங்களும் நடப்பாண்டு விற்பனையாகவில்லை. ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு நெல் விளைச்சல் அபரிமிதமாக உள்ளதால், இங்கு விளையும் சன்ன ரக நெல்லுக்கான வரவேற்பு குறைந்துள்ளது. மேலும், மழையாலும், பூச்சி, நோய் தாக்குதலாலும் பாதிக்கப்பட்ட நெல்லின் தரமும் குறைவாக உள்ளது. பனிப்பொழிவு, வெயில் இல்லாததன் காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும், தனியார் வியாபாரிகள் வாங்க தயங்குவதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.