தஞ்சாவூர்: தஞ்சையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பனியால் வெண்மேகங்கள் போல் படர்ந்து பாதி அளவே தெரிந்தது. காய்ந்த நெல்லும் பனியால் நனைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பரவலாக பெய்து வந்தது. மேலும் தஞ்சை உட்பட சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம், ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம் உட்பட பகுதிகளில் தற்போது குறுவை அறுவடை நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை முடித்து நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். 


இதில் மேற்கண்ட பகுதிகளில் தாமதமாக நாற்று விட்டு சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் தற்போது நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அவ்வபோது அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை மேலும் நீடித்தால் சாகுபடிக்கு தயாராக உள்ள நெற் பயிர்கள் வயலில் சாய்ந்து விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்து இருந்தனர். 


இதற்கிடையில் தஞ்சாவூர் அருகே மாப்பிள்ளைநாயக்கன்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தது.  விவசாயிகள் நெல்களை அறுவடையும் செய்ய முடியாமலும் அறுவடை செய்த நெல்களை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனையும் செய்ய முடியாமல் காத்து நிற்கின்றனர். இந்நிலையில் தஞ்சை அருகே மாப்பிளை நாயக்கன்பட்டி பகுதியில் குறுவை நெல்கள் தற்போது பெய்த மழையால் சாய்ந்துள்ளது. தொடர்ந்து ஒரு வார காலமாக பெய்து வரும் மழையால், பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.




இதற்கிடையில் தஞ்சை மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனியின் பக்கம் இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். தஞ்சாவூர் ரயில் நிலையம், மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டன.


பஸ்களும் காலை நேரத்தில் விளக்கை எரியவிட்டபடி சென்று வந்தன. அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களும் இந்த பனிபொழிவு காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் விவசாயப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலியமங்கலம், ராராமுத்திரகோட்டை, கோவிலூர்  பகுதியில் உலர் களம் வசதி இல்லாததால் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 


தற்போது பனி மூட்டம் அதிகம் இருப்பதால் காய வைக்கும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாகி விடுகிறது. இதுவும் விவசாயிகளுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.  தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 2,500 ஏக்கரில் குறுவை, சம்பா மற்றும் கோடை சாகுபடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இப்பகுதியில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளும் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்மணிகள் பனியில் நனைந்துள்ளதால் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் அறுவடை பணிகளில் தடை ஏற்பட்டுள்ளது.