தஞ்சாவூர்: தண்ணீர் வரத்து இல்லாததால் சம்பா பயிரிட முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
கோட்டாட்சியர் செ. இலக்கியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசிய கோரிக்கைகள் விபரம் வருமாறு:
அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: காவிரி நீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களைக் கணக்கெடுக்கும் பணியை வேளாண் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையான ஹெக்டேருக்கு ரூ. 13 ஆயிரத்து 500 என்பதை மறுபரிசீலனை செய்து ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவோணம் வி.எஸ். வீரப்பன்: மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால், சம்பா பயிரிட முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் கடந்த ஆண்டு தளிகைவிடுதி கிராமத்தில் மழையால் மிகப் பெரிய அளவில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், பயிர்க் காப்பீடு இழப்பீட்டு தொகை தளிகைவிடுதி கிராமத்துக்கு கிடைக்கவில்லை. இது குறித்தும் நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை கிடைக்க செய்ய வேண்டும்.
ஆம்பலாப்பட்டு தங்கவேல்: ஆம்பலாப்பட்டு கிராமத்தில் அடிக்கடி மும்முனை மின்சாரம் தடைப்படுவதால், பின் பட்ட சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, மும்முனை மின்சாரத்தை தடையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்பட்ட சம்பா சாகுபடிக்கு தற்போது தண்ணீர் தேவை இருக்கிறது. எனவே மும்முனை மின்சாரம் தடைப்படாமல் கிடைக்க செய்ய வேண்டும். அடிக்கடி மும்முனை மின்சாரம் தடைப்படுவதால் விவசாயப்பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்துக்கு கால்நடை மருத்துவர் வருவதில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேங்கராயன்குடிகாடு து. வைத்திலிங்கம்: கொ. வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் கால்நடை மருத்துவர் வருவதில்லை. இதனால், கால்நடை வளர்ப்போர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
கோட்டாட்சியர்: இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவோணம் எல். பழனியப்பன்: நடப்பாண்டில் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால், சம்பா சாகுபடிக்கு பதிலாக நிறைய பேர் நிலக்கடலை சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. அதற்கு தகுந்தாற்போல வேளாண் துறையில் கடலை விதை இருப்பு வைக்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: காவிரி நீர் வராததால், விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவைப் பருவத்தை நவம்பர் மாதத்திலேயே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாச்சூர் புண்ணியமூர்த்தி: சம்பா நாற்று விடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் மும்முனை மின்சாரம் 12 மணிநேரம் மட்டுமே விடுவது போதுமானதாக இல்லை. தொடர்ந்து 20 மணிநேரம் மும்முனை மின்சாரம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.