அரூரில் அரசு விதிகளை மீறி விதை விற்பனையில் ஈடுபட்ட தனியார் விதை விற்பனை நிலைய உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

 

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட விவசாய நிலத்தில், ஈஸ்வர்-22 ரக நெல் பயிரிட்டதில், நடவு செய்த 30 நாட்களில் கதிர் வைத்தது. இந்த பிரச்சிணை குறிப்பிட தனியார் விதை கடையில் வாங்கிய விவசாயிகளுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளுக்கும், விதை ஆய்வாளருக்கும் புகார் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தருமபுரி விதை ஆய்வு துறை இயக்குநர் சங்கர் உள்ளிட்ட வேளாண் துறை அதிகாரிகள் அரூரில் புகாருக்குள்ளான விதை விற்பனை செய்த கடையில் ஆய்வு செய்தனர்‌. அப்பொழுது. பொருட்கள் வாங்கிய, விற்பனை செய்த விவரம், இருப்பு பதிவேடு, விதையின் தரம், வாங்கிய விவசாயிகளின் விவரம், விற்பனை செய்ததற்கான  ரசீது நகல் உள்ளிட்டவறை ஆய்வு செய்தனர். அப்பொழுது அரசு விதிமுறைகள் படி, விதை விற்பனை செய்த, கடையில் முறையாக பதிவேடு பராமரிக்கமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு விற்பனை செய்த விதைகளுக்கு முறையான ரசீது கொடுக்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாரத்தில் விதிகளை மீறி விதை விற்பனை செய்த தனியார் விதை விற்பனை நிலைய உரிமம் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



 

மேலும் விதை விற்பனையாளர்கள் விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்தும், விவசாயிகளுக்கு தரமும், உரிய முளைப்புத் திறனும் கொண்ட பருவத்துக்கு ஏற்ற விதைகளை விநியோகிக்க வேண்டும். விதை இருப்புப் பதிவேட்டில் விற்பனை செய்த விதைகளை தினமும் கழித்து இருப்பினை சரிபார்த்து முறையாக பராமரிக்க வேண்டும். விதை உரிமம் கடையில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். அனைத்து விதை கொள்முதலின்போதும் விவசாயிகளுக்கு பயிர், ரகத்தின் பெயர், குவியல் எண், காலாவதி தேதி, விலை, விவசாயி பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய, கடைக்காரரின் கையொப்பத்துடன் கூடிய ரசீது வழங்கப்பட வேண்டும். விதைகளை உர சிப்பங்கள், பூச்சி மருந்துகளின் அருகே வைக்கக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோரின் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



 

அதேபோல் விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகள் பருவத்துக்கு ஏற்றவையா என்பதை அறிந்தும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் தங்கள் பகுதி வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி சந்தேகங்களை போக்கிக் கொள்ள வேண்டும். விதைகள் போன்றவற்றை வாங்கும்போது தங்கள் பெயர், விற்பனையாளரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீது பெற்றுச் செல்ல வேண்டும் விதை ஆய்வு துணை இயக்குநர் சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.