தஞ்சாவூர்: தனது கோழி பண்ணை கொட்டகையை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக  விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மனு அளித்தார்.



தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில்  மாவட்ட தலைவர் உத்திராபதி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், ஒன்றிய தலைவர் அன்வர் அலி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் முகமது வஹி மன்சூர் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது. :

நான் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளராக உள்ளேன். எனக்கு சொந்தமான கோழிப்பண்ணை கொட்டகை சேதுபாவாசத்திரம் சம்பைப்பட்டினத்தில் உள்ளது. கடந்த 1ம் தேதி அன்று நள்ளிரவு நேரத்தில் இந்த கோழிப்பண்ணை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்து விட்டனர்.

இதில் கொட்டகையில் இருந்த இயந்திரங்கள், மின் மோட்டார்கள், தளவாடப் பொருட்கள், கோழிகளுக்கு உணவு வைக்கும் பொருட்கள் என ரூ.6 லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து விட்டது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து  நடவடிக்கை மேற்கொண்டு உரிய நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில், பயிர் இழப்பீடு தொகை கிடைக்காத விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி வருவாய் வட்டத்துக்குட்பட்ட செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம் பட்டி, முத்துவீர கண்டியன்பட்டி, காங்கேயம் பட்டி, கோட்டரப்பட்டி பகுதி விவசாயிகள் முறையாக பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி உள்ளனர். இருப்பினும் மேற்கண்ட பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை.

கடந்த வாரம் பூதலூரில் நடந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் அப்பகுதி விவசாயிகள் மனு அளித்துள்ளனர். ஆனால்  இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை . எனவே இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை விரைவில் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.