தஞ்சாவூர்: நடப்பாண்டு பருவ மழை பொய்த்த காரணத்தால் குறுவை சாகுபடியில் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. சம்பா பருவத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அளவுக்கு நெல் கொள்முதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.



தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 மண்டலங்களில் சம்பா பருவ நெல் கொள்முதல் தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:
 
தமிழகத்தில் கடந்த 2021 - 22ம் ஆண்டில் 43.28 லட்சம் டன்னும், 2022 - 23ம் ஆண்டில் 44.22 லட்சம் டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல, 2023 - 24 ஆம் ஆண்டில் 1,875 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டு, இதுவரை 1,493 நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 481 நிலையங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 531 நிலையங்களும், நாகை மாவட்டத்தில் 171 நிலையங்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 180 நிலையங்களும் கடலூர் மாவட்டத்தில் 202 நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையங்களில் இதுவரை 6.08 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 7.42 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 1.09 லட்சம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ. 1,619 கோடி அவர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 95 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, ரூ. 1,200 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு பருவ மழை பொய்த்த காரணத்தால் குறுவை சாகுபடியில் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. சம்பா பருவத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அளவுக்கு நெல் கொள்முதலாகும் என அலுவலர்கள் கூறுகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து தற்போது 2 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால், கடந்த ஆண்டு அளவுக்கு நிகழாண்டும் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமையும் செயல்படவும், நாள்தோறும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் தேவைப்படும் இடங்களில் இரு நெல் தூற்றும் இயந்திரங்களை அமைத்து நாள்தோறும் 2 ஆயிரம் மூட்டைகளைக் கொள்முதல் செய்யவும், நெல் கொள்முதல் செய்தவுடன் அரவை ஆலைக்கு 48 மணிநேரத்தில் அனுப்பவும், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறைக் கூடுதல் தலைமைச் செயலர் கோபால், வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா, வேளாண் துறை இயக்குனர் முருகேஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.