தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி வயல்களில் வெளி மாநிலத்தை சேரந்தவர்கள் வாத்துக்கிடை அமைத்து மேய்ச்சலுக்கு விட்டு உள்ளனர். இவர்களுக்கு சில சமூக விரோதிகளால் தொல்லைகள் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

முப்போகம் சாகுபடி செய்யும் பகுதி


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆண்டு முழுவதும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அதுபோக விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பின் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் ஜூன் மாதம் திறக்கப்படுவது வழக்கம். இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் சாகுபடி பணிகளை மேற்கொள்கின்றனர்.

21 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டாரத்தில் சுமார் 21 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது விளை நிலங்களை அடுத்தகட்ட விவசாயத்திற்காக தயார் செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்காக வயல்களில் நீர் தேக்கி உழுவதற்கு தயார் நிலையில் உள்ளது.


வாத்துக்களுக்கான உணவு

ஏற்கனவே சாகுபடி செய்து அறுவடை செய்யப்பட்டபோது சிதறிய நெல்மணிகள் வயல் முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் வாத்துக்களுக்கான உணவுகள் இப்பகுதியில் அதிகம் கிடைக்கிறது. இதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பல்வேறு குடும்பத்தினை சேர்ந்தவர்கள் வாத்து மேய்ச்சலுக்காக கும்பகோணத்திற்கு வந்துள்ளனர்.





70 ஆயிரம் வாத்துக்கள் மேய்ச்சல்

இதுகுறித்து வாத்து மேய்ச்சலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து குடும்பமாக நாங்கள் வாத்து மேய்ச்சலுக்கு வந்துள்ளோம். குறிப்பாக வயல்களில் அறுவடை காலங்களிலும், நிலத்து உழுது சேறும் சகதியுமாக இருக்கும் நிலையிலும் வாத்துகளை மேய்ச்சலுக்கு விடுவோம். தற்போது கும்பகோணம் வட்டாரத்தில் அறுவடை பணிகள் முடிந்துள்ளது. இந்த வயல்களில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளன. வயலில் மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் நத்தை, நண்டு, சிறு பூச்சி, புழு ஆகியவற்றை தின்று இரையாக்கி்கொள்ளும். இதன் மூலம் வாத்துகளுக்கு இரை கிடைப்பதுடன், வாத்துகளின் கழிவுகளும் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கிறது.

முட்டைகளில் தான் வருமானம்

வயலின் உரிமையாளரிடம் பேசி குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு வயலில் தண்ணீர் பாய்ச்சி மேய்ச்சலுக்கு விடுவோம். மேய்ச்சலில் போதிய வருமானம் கிடைப்பது இல்லை. மாறாக வாத்துக்கள் முட்டையை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள் குடிபோதையில் வாத்துக்களை இலவசமாக கேட்டு மிரட்டுகின்றனர். சிலநேரங்களில் தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர். வாத்துக்களை கொடுக்க மறுத்தால் வாத்துக்கள் அடித்து தாக்குகின்றனர். இதனால் பல வாத்துக்கள் இறந்துள்ளன. மொழிதெரியாத ஊர்களில் பிழைப்புக்காக வந்துள்ள எங்களுக்கு போலீசில் புகார் கொடுக்க அச்சமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.