தஞ்சாவூர்: தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிர்களுக்கு காலம் தாழ்த்தாமல் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இளங்கோ தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது:
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: குருங்குளம் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணிகள் நடந்து வருகிறது. இங்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன்பாக பணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதற்காக கூட்டுறவு வங்கியில் செலுத்தும் வகையில் கடந்த டிச.30ம் தேதி காசோலை வழங்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை விவசாயிகளின் கணக்கில் வரவு ஆகவில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உடன் வரவு வைக்கப்படும் நிலையில் கூட்டுறவு வங்கியில் செலுத்தப்பட்ட காசோலைக்கு உரிய பணம் இன்னும் விவசாயிகளின் கணக்கிற்கு வராதது ஏன்? இந்த நிலை நீடித்தால் விவசாயிகள் போராட்டத்தில் இறங்குவோம். இப்பகுதியில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் இன்னும் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறையால் விவசாயிகளுக்கு டிராக்டர், குபேட்டா போன்றவை குறைந்த வாடகையில் கொடுக்கப்படுகிறது. அதே போல் ட்ரோன் தர வேண்டும்.
ஏகேஆர். ரவிச்சந்தர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மத்தியக்குழு ஒரத்தநாடு பகுதியில் நெல்லில் உள்ள ஈரப்பதம் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இது வெறும் கண்துடைப்பு. 17 சதவீத ஈரப்பதம் என்பதை நிரந்தரமாக 20 சதவீதம் என்று எப்போதும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பனிப்பொழிவு, தொடர் மழையால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்முதல் நிலையத்தில் ஒரு சிப்பத்திற்கு ரூ.60 கட்டாய வசூல் மற்றும் எடை மோசடி போன்றவற்றை தடுக்க கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும்.
பெரமூர் ஆர். அறிவழகன்: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தை உடன் வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்குவதில் தாமதம் செய்ய கூடாது. மத்திய குழு மற்றும் தொழிற்நுட்ப குழுவினர் டெல்டா மாவட்டத்தில் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். அவர்களிடம் நிரந்தர தீர்வாக இயந்திர உலர்த்தியை அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் பயன்படுத்தி கொள்தல் செய்ய ஆவன செய்ய வேண்டும்.
வெள்ளாம்பரம்பூர் துரை. ரமேஷ்: கடந்த டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையினால் திருவையாறு பகுதிகளில் பயிர்கள் கடும் சேதம் அடைந்தன. இதற்கு விவசாயிகளிடமிருந்து நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆவணங்கள் அனைத்தும் அரசால் பெறப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை இன்று வரை வரவு வைக்கப்படவில்லை. மேட்டூர் அணையை வழக்கமாக மூடும் காலம் கட்டமான ஜனவரி 28ம் தேதி என்பதை பிந்தைய சாகுபடியான சம்பா தாளடியை கணக்கில் கொண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். வெள்ளாம்பரம்பூரில் பிள்ளை வாய்க்கால் வலது கரை விவசாய பயன்பாட்டிற்கான சாலை 2.5 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதை சீர் செய்து தரவேண்டும். திருவையாறு வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு நத்தம் பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேங்கராயன் குடிகாடு து.வைத்திலிங்கம்: வேங்கராயன் குடிக்காட்டில் விவசாய நிலைத்திற்கு செல்லும் பாதையை தார்சாலையாக அமைக்க வேண்டும். இந்த இடம் நாஞ்சிக்கோட்டை, கொல்லாங்கரை, வல்லுண்டான்பட்டு வருவாய் கிராமங்களைசேர்ந்த இடமாக இருப்பதால் சாலைக்கு தேவையான இடத்தை அளந்து கொடுக்க வேண்டும்.
இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ்: மாவட்டம் முழுவதும் உரம், பூச்சி மருந்து ஒரே விலையில் விற்க வேண்டும். தனியார் உரக்கடைகளில் விவசாயிகள் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வாங்கும்போது ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலையில் விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். எனவே வேளாண்துறை அதிகாரிகள் நேரடியாக அனைத்து உரக்கடைகளையும் ஆய்வு செய்து அதிக விலைக்கு உரம், பூச்சி மருந்துகளை விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
ரெ.புண்ணியமூர்த்தி: வரும் கோடை காலத்தில் (மார்ச், ஏப்ரல்) விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள கிராமங்கள் தோறும் நடமாடும் மண்பரிசோதனை வாகனங்கள் சென்று மண்மாதிரியை ஆய்வு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆய்வின்படி விவசாயிகள் உர நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேளாண் அலுவலர்கள் உதவி செய்ய வேண்டும். கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு உரிய நிவாரணத்தை உடன் வழங்க வேண்டும்.
அ.மாதவன்: ஆம்பலாப்பட்டு தெற்கு ஊராட்சிக்கு உட்பட்ட சோமன் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு இப்பகுதி வழியாக செல்லும் 5ம் நம்பர் பாசன வாய்க்கால் தூர்ந்து போய் உள்ளதுதான் காரணம் ஆகும். எனவே இந்த பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.