தஞ்சாவூர்: பாசன வாய்க்கால்களை உடன் தூர்வார வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரவிச்சந்திரன், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர்: பயிர் காப்பீடு திட்டத்தில் பல குளறுபடிகளால் விவசாயிகளுக்கு இழப்பீடுகள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். தஞ்சாவூரில் காப்பீடு நிறுவன அலுவலகத்தை உடனடியாகத் திறக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் சம்மந்தமாக உணவுத்துறை செயலாளர் மற்றும் மாநில உயர் அதிகாரிகள் விவசாயிகள் பங்கேற்கும் கூட்டம் தஞ்சாவூரில் ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கம் மேற்படி கூட்டத்தை உடனே நடத்த அரசுக்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும்.
நசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் வீரசேனன்: மேட்டூர் அணையில் இருந்து குறைந்த நாட்களே தண்ணீர் திறக்கப்பட்டதால் ஏரி, குளங்கள் நீர் நிரம்பாமல் வறண்டு ோன் உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளது. விவசாயப்பணிகள் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை இந்தாண்டு மீன்பாசி குத்தகைக்கு விடுவதை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள தென்னை வணிகவளாகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ள இயந்திரங்கள், தரமில்லாத வகையில் உள்ளது. சுமார் ரூ.8 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ள இந்த வளாகத்தில் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. நீர் நிலை புறம்போக்கு பகுதியில் அமைக்கப்பட்ட இந்த தென்னை வணிக வளாகம் செயல்படாமல் இருந்தால், உடனடியாக அந்த இடத்தை நீர்வள ஆதரத்துறையிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: கடந்த 2015ல் நடந்த கரும்பு ஊழல் ரூ.16 கோடி குறித்து கடந்த மாதம் நடந்த சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தில் தெரிவித்தோம். ஆனால் ஆலை நிர்வாகம் ரூ.2 கோடி தான் நடந்துள்ளது என்று கூறி அப்பாவி அலுவலர்கள் முதல் தொழிலாளர்கள் வரை பணிநீக்கம் செய்தது. ஆனால் பணத்திற்கு பொறுப்பு அதிகாரியான உலகநாதன் என்பவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க வேண்டும். போதிய மழை இல்லாத காரணத்தால் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம்: சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி விட்டது. எனவே மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களை உடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். அய்யம்பேட்டை, செருமாக்கநல்லூர், மாங்குடி என ஐம்பதாயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் அடையக்கூடிய பாசன வாய்க்கால் தற்போது சாக்கடை கால்வாயாக மாறிவிட்டது. இதை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன்: தமிழ்நாடு சிறப்பு நிலை ஒருங்கிணைப்பு சட்டம் -23 ஐ அரசு உடன் திரும்ப பெற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த நிலக்கடலையை அரசே உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். இதேபோல் மரவள்ளி கிழங்கை அரசை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் மானியமும் வழங்க வேண்டும். தொடர்ந்து இருபது மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
ஆழ்துளை கிணற்றுப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி: ஒரத்தநாடு ஒன்றியம் பாச்சூர் நீர்நிலை புறம்போக்கு பாச்சேரி ஓடைகுளம் மற்றும் கல்லணை கால்வாய் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கும், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடை முறையில் முன்பு இருந்தது போல் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் களைக்கொல்லி மருந்து விநியோகம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
பாசனதாரர் சங்க தலைவர் அம்பலாப்பட்டு தங்கவேல்: கடைமடை பகுதியில் லஸ்கர் காலி பணியிடங்களை உடன் நிரப்பி பாசன வாய்க்கால்களை தூர்வாரி விவசாயிகள் சாகுபடி செய்து பயன்பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.