தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா பகுதியில் விடுபட்டுள்ள கிராம விவசாயிகளுக்கு பயிர் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் மனுவும் அளித்தனர்.


தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் தலைமையிலான விவசாயிகள் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 


பூதலூர் தாலுகா டெல்டாவின் தலைப்பு பகுதியாகும். இந்த ஆண்டு தண்ணீர் கிடைக்காததால், பெரும்பகுதி நிலங்கள் விவசாயம் செய்யப்படவில்லை. செங்கிப்பட்டி பகுதியில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில், முற்றிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தஞ்சை மாவட்ட பகுதி விவசாயத்திற்கு வழங்கப்படவில்லை. 


தற்போது இந்தப் பகுதிக்கு பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். ஆனால், இதில் தஞ்சை மாவட்டத்தில் செல்லப்பன் பேட்டை, மருதக்குடி, அய்யாசாமிப்பட்டி, திருவேங்கட உடையான்பட்டி, மாதுரான்புதுக்கோட்டை, செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி வடக்கு, பாளையப்பட்டி தெற்கு, புதுக்குடி தெற்கு ஆகிய கிராமங்கள் பயிர் காப்பீட்டு பலன்களில் இருந்து முற்றிலுமாக விடுபட்டுள்ளது. 


தண்ணீரே வழங்காமல், விவசாயமும் நடைபெறாமல், மிகவும் மன உளைச்சலோடு இருக்கும் இப்பகுதி விவசாயிகள் இதனால் மிகப்பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். எனவே, இந்த ஆண்டு வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு முறையாக ஆய்வு செய்து பயிர் காப்பீடு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


முன்னதாக பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.