தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் 30 நாட்கள் வளர்ந்த குறுவை நாற்றுக்களை பறித்து கட்டுகட்டும் பணியில் விவசாயத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை உட்பட டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிதான் முக்கிய பயிராக உள்ளது. ஒரு சில பகுதிகளில் கடலை, எள், உளுந்து, சோளம், கரும்பு, வாழை போன்றவை பயிரிடப்படுகின்றன. இருப்பினும் குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும் நெல் சாகுபடிதான் பிரதானமாக இருந்து வருகிறது.

கடந்தாண்டு மே மாதத்திலேயே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி எதிர்பார்த்ததை விட அதிகளவில் நடந்தது. நடப்பாண்டு கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. முன்னதாக தண்ணீர் கடைமடைவரை சென்றடைய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஏரி, பாசன வாய்க்கால்களை தூர்வாரியது. இதனால் தண்ணீர் விரைவாக கடைமடையை சென்றடைந்தது.
 
இதையடுத்து, விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், களிமேடு, ரெட்டிப்பாளையம் பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.




 
இப்பகுதிகளில் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆற்று தண்ணீரை கொண்டு சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நேரடி நெல் விதைப்பு, நாற்று நடுதல், பாய் நாற்றங்கால், இயந்திரம் வாயிலாக நடவுப்பணி என விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தகுந்தவாறு குறுவை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நாற்றங்காலில் 30 நாட்களுக்கும் மேலாக வளர்ந்த நாற்றுக்களை பறித்து கட்டும் பணியில் விவசாய தொழிலாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். ஆலக்குடி, கல்விராயன் பேட்டை, சித்திரக்குடி, கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம் உட்பட பல பகுதிகளில் நாற்று நடும் பணிகளும் மும்முரம் அடைந்துள்ளது. ஒரு சில இடங்களில் வயல்களில் தண்ணீர் தேக்கி உழும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சில பகுதிகளில் விவசாயிகள் பாய் நாற்றங்கால் வாங்கி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு தஞ்சை மாவட்ட அளவில் குறுவை சாகுபடி 1.80 லட்சம் ஏக்கரில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதில் தற்போது வரை 1.20 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி பணிகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது முறை வைத்து ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேவையான அளவு உரம் கையிருப்பு இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தரப்பிலும் தெரிவித்தனர். மழை அதிகரிக்கும் முன்பாக நாற்றுக்களை நட்டு விட்டால் அவை செழித்து வளர வாய்ப்பாக அமையும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.