கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்துள்ள சின்னட்டியில் உள்ள ஜம்புகான்கொடைகை ஏரி சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை சுற்றிலும் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது.


இந்த ஏரிக்கு நீர்வரத்து  மத்திகிரியிலிருந்து மாசிநாயக்கனப்பள்ளி, கொமாரனப்பள்ளி, முகலூர், கூட்டூர் உள்ளிட்ட 72 ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர்  ஜம்புகான்கொடைகை ஏரிக்கு வந்து இங்கிருந்து சனத்துகுமார ஆறு வழியாக தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அணைக்கு சென்றடைகிறது. இந்த ஏரியில்  ஆழ்த்துளை கிணறு அமைத்து கெலமங்கலம் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.  அதே போல்  சுற்றி உள்ள விளை நிலங்கள் மற்றும் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்த இந்த ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும் தடுப்பு சுவர் உடைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உடைந்தது.


இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் மொத்த நீரும் தேக்கி வைக்க முடியாமல் வெளியேறி வீணாகிறது. இதனால் உபரி நீர் வெளியேறும் தடுப்பை  சீரமைக்க வேண்டும் என  கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதிகாரிகள்  இந்த ஏரி அரசுக்கு சொந்தம் இல்லை  என  கைவிடப்பட்டாகவும் இதனால்  மாவட்ட ஆட்சியர்  ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னர். 


 இது குறித்து விவசாயிகள் கூறும் போது:- கெலமங்கலம்   பேரூராட்சிக்கும்- ஜெக்கேரி ஊராட்சிக்கும் இடையில் ஜம்புகான்கொடைகை ஏரி  உள்ளது. இந்த ஏரிக்கு 72 ஏரிகளிலிருந்து வரும் உபரி நீர் தேக்கி வைத்து விளைநிலங்களுக்கும், குடிநீருக்கும் பயன் உள்ளதாக இருந்தது.


 இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளத்தால் உபரி நீர் செல்லும் தடுப்பு உடைந்து தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் முற்றிலும் வெளியேறியது. பின்னர் இதனை சீர் செய்யாமல் விட்டதால், மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி நிற்காமல் சனத்குமார் ஆற்றில் வீணாக கலக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் இந்த ஏரி எங்களுக்கு சேரவில்லை என கூறிவிட்டனர். இதனால் ஜெக்கேரி ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் இது எங்களுக்கு சேரவில்லை என கூறுகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களும் எங்களுக்கு சேரவில்லை என கூறுகின்றனர். இப்படி மாறி மாறி  அதிகாரிகள்  இந்த ஏரியை கைவிட்டதால்,  தற்போது ஏரி தண்ணீரியின்றி பயன் இல்லாமல் வறண்டு உள்ளதால் சிலர் ஏரியை ஆக்கிரமித்துள்ளனர். 


எனவே மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஏரி யாருக்கு சொந்தம் என ஆய்வு செய்து உடைந்த தடுப்பை சீரமைத்து தண்ணீரை சேமித்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கூறினர்.