தஞ்சாவூர்: காவிரி பாசனப் பகுதியில் விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதுமை சாகுபடி முறைகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் புதுமையான சாகுபடி முறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமும், ஆதரவும் அளித்து வருகின்றனர்.

Continues below advertisement

காவிரி பாசனப்பகுதியில் பல்வேறு நடவு முறைகளை விவசாயிகள் பின்பற்றினாலும் விவசாய பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை காரணமாக செம்மை நெல் சாகுபடியை எளிமையாக மாற்றி இயந்திரங்கள் மூலம் நடவு மேற்கொள்வது சமீப காலமாக பிரபலம் அடைந்து வருகிறது. 

டெல்டா மாவட்டங்களில் ஒரே நேரத்தில் நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் சூழ்நிலை உள்ளது. இதனால் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதன் காரணமாக குறிப்பிட பருவத்தில், குறிப்பிட்ட நேரத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை பணிகள் பாதிக்கப்படுகிறது. இதை சரி செய்ய செம்மை நெல் சாகுபடி முறைகள் புகுத்தப்பட்டது. செம்மை நெல் சாகுபடியில் குறைவான விதை அளவு, குறைவான நாற்றங்கால் பரப்பு. வயது குறைவான நாற்று, நீர்மறைய நீர்க்கட்டுதல், ஒற்றை நாற்று போன்று எளிய முறைகள் உள்ளன. 

Continues below advertisement

இருப்பினும் காவிரிப் பாசனப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் தேங்கி இளம் நாற்றுகள் வீணாவதால் இந்த முறையை முழுமையாக விவசாயிகள் கடைப்பிடிக்க தயங்கினர். இந்நிலையில் சமீப காலமாக பாய் நாற்றங்கால் மற்றும் தட்டுகள் (ட்ரே) முறையில் நாற்று விட்டு எளிதாக நடவு வயல்களுக்கு கொண்டு சென்று நடவு இயந்திரம் மூலம் இரண்டு அல்லது மூன்று நாற்றுக்களை தேவைக்கு ஏற்ப நடவு செய்வதன் மூலம் திட்டமிட்டப்படி அனைத்து பகுதிகளிலும் சரியான பருவத்தில் நடவு செய்ய முடிகிறது.

ஆள் பற்றாக்குறையை சமாளிப்பது மிகவும் எளிதாகிறது. நேரம் மிச்சமாகிறது. செலவும் குறைகிறது. பயிர் எண்ணிக்கை திட்டமிட்டுப்படி நடவு செய்யப்படுவதால் மகசூல் மகத்தானதாக அமைந்து விடுகிறது.

ஒரு ஏக்கர் இயந்திரம் மூலம் நடவு செய்ய 40 சதுர மீட்டர் நாற்றங்கால் போதுமானது. 70 சதம் மண்ணுடன் 20 சதம் மக்கிய தொழு உரம் மற்றும் 10 சதம் சாம்பல் கலந்து கலவையை தயார் செய்து கொள்ள வேண்டும். நாற்றங்காலை மேட்டுப்பாத்தியாக அமைத்து அதில் பாலிதீன் பேப்பர் 40 மீட்டர் நீளம் ஒரு மீட்டர் அகலத்தில் விரித்து அதன் மேல் விதைப்பு சட்டம் 0.125 சதுர மண் கலவையை 4 சென்டிமீட்டர் உயரத்தில் அமைத்து விதைகளை மேலாக சீராக விதைக்கலாம். விதைப்பு செய்வதற்கு என இயந்திரங்கள் உள்ளது.

பிளாஸ்டிக் தட்டுகள் (ட்ரே) மூலமும் விதைப்பு மேற்கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு 80 முதல் 100 நாற்றே தேவைப்படும். ஒரு ஏக்கருக்கு தேவையான 15 முதல் 20 கிலோ விதையினை 100 நாற்று விடும் தட்டுக்களில் தெளிப்பதன் மூலம் ஒரு டிரேயில் 150 முதல் 200 கிராம் விதைகளை தெளிக்க வேண்டும். ஒரு டிரேயில் 150 முதல் 200 கிராம் விதைகளை தெளிக்க வேண்டும். ட்ரே மூலம் மண் கலவை தயார் செய்து சீராக விதைப்பதற்கு இயந்திரங்கள் முன்னோடி விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தூள் செய்யப்பட்ட டிஏபி உரத்தை ஒரு ஏக்கர் நடவு செய்ய தேவையான 40 சதுர மீட்டரில் ஒரு கிலோ வீதம் தூவ வேண்டும். விதைப்பு செய்தது முதல் 5 நாட்கள் வரை பழைய வைக்கோல் கொண்டு அல்லது பச்சை வலை கொண்டு மூடி பூ வாளி மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். 5வது நாள் நாற்றுகள் நன்கு முளைத்த பின் மூட்டம் போட்ட வைக்கோல் அல்லது வலையினை அகற்ற வேண்டும்.

15 நாட்களில் நாற்றுகள் நன்கு வளர்ச்சி அடைந்து இயந்திரம் மூலம் நடவு செய்ய தயாராகிவிடும். நடவு வயலில் நன்கு உழுது சேறடித்து மேடு, பள்ளம் இல்லாமல் வயலை சமப்படுத்த வேண்டும். செம்மை நெல்லின் வெற்றி வயதை சமப்படுத்திவதில் உள்ளது. மண் மாதிரி பரிந்துரை அல்லது பொது பரிந்துரை மூலம் உரங்களை பயன்படுத்தி நடவு பணியை மேற்கொள்ள வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட களைக்கொல்லி மருந்தை பயன்படுத்தி களைகளை கட்டுப்படுத்த வேண்டும். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 500 மில்லி லிட்டர் நீர் தேவைப்படும். ஆனால் இயந்திரம் மூலம் செம்மை நெல் சாகுபடி செய்யும் போது நீர் மறைய நீர் கட்டுவதால் 30 சதம் நீர் தேவை குறைகிறது. இதனால் விவசாயிகள் மத்தியில் செம்மை நெல் சாகுபடி, நவீன விவசாயம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் நிறைவான மகசூலும் கிடைப்பததால் இதுபோன்ற நவீன முறை விவசாயத்திற்கு விவசாயிகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.