தஞ்சாவூர்: குறுவை பயிரை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் 5.75 லட்சம் ஏக்கரில் இலக்குகளை தாண்டி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் தொடந்து கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகள் தரப்பில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே கிளை வாய்க்கால்களில் தண்ணீர் முழு அளவில் பாய்ந்து கடைமடை வரை பயிர்களுக்கு சீராக சென்றடையும் என்று தெரிவித்தனர். 




இருப்பினும் மேட்டூர் அணையில் நீர்வரத்தும். நீர் இருப்பும் திருப்திகரமாக இல்லை என்று காரணம் காட்டி கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, மற்றும் கல்லணை கால்வாய்களில் முறைபாசன முறையை அரசு அமல்படுத்தியது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதனால் போதிய அளவில் தண்ணீரின்றி குறுவை பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டது. பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து வயல்களில் ஊற்றிய சம்பவமும் நடந்தது.


கல்லணையில் இருந்து ஜூன் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதில் இருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய்களில் முழு அளவில் தண்ணீர் திறக்கப்படவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்லணை கால்வாயில் அதிகபட்சமாக 1500 கன அடி மட்டுமே 7 நாட்களுக்கு திறக்கப்பட்டது. அதன் பின்னர் 1300, 1400 என்ற அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 


காவிரி, வெண்ணாற்றில் அதன் முழு கொள்ளளவில் தண்ணீர் இதுவரை திறந்து விடப்படவில்லை. முறைப்பாசன முறையால் ஆங்காங்கே காயும் பயிர் குறித்து விவசாயிகள் முறையிட்டால் அதனை கண்டு கொள்ளாத போக்கு உள்ளது. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடி விளைந்து முழுமையாக வீடு வருமா? இல்லை இம்முறை நஷ்டத்தில் கொண்டு போய் தள்ளுமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். 


இந்நிலையில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு நேற்று மாலை நிலவரப்படி 16.869 டி.எம்.சி.யாக உள்ளது. நீர்வரத்து 5018 கன அடியாக உள்ளது. நீர் திறப்பு 8ஆயிரம் கன அடியாக உள்ளது. டெல்டா பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்கள் 2-ம் களை எடுத்து, 2-ம் முறையாக உரம் இடும் தருணத்தில் உள்ளது. தற்போது அடிக்கும் வெயில் காரணமாக வயல்களுக்கு தண்ணீர் தினமும் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது.




கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் தினமும் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டாலும் கடைக் கோடி குறுவை பயிர்களுக்கு தண்ணீர் சென்று சேருமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு காவிரி பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்தி கர்நாடக அரசிடம் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டால்தான் குறுவை பயிர்களை காப்பாற்ற இயலும். தற்போது அவ்வபோது பெய்யும் மழையால் வாடிய நிலையில் உள்ள குறுவைப்பயிர்கள் சற்றே பிழைத்துக் கொண்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் என்றும் நம்பி இருக்க இயலாது. எனவே கர்நாடகாவிடம் இருந்து கூடுதல் தண்ணீர் கேட்டுப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.