தஞ்சாவூர்: பனை மரங்கள் மிகுந்து காணப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தை பெற்றுள்ளது இதன் விதை, கிழங்கு, ஓலை, ஈர்க்கு, மட்டை, நார், சாறு, பழம் மரத்தண்டு என பலதரப்பட்ட பயனை தருகிற பனைமரத்தை வருங்கால வாரிசுகளுக்கு விதைப்போம் என தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஈஸ்வர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் நிலத்தின் அடையாளமாக திகழும் பனைமரம் முந்தைய ஆண்டுகளில் 30 கோடிக்கு மேல் இருந்துள்ளது. ஆனால் இன்று 3 கோடி அளவில் குறைந்து காணப்படுவது கவலை அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் வெட்டப்படும் அளவிற்கு விதைப்பது குறைந்து காணப்படுகிறது, காலப்போக்கில் காலவாய் எனப்படும் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் வெட்டப்படுவது வேதனை தருகிறது. பழங்காலத்தில் பனை மரங்கள் விளை நிலங்களின் இயற்கை வேலியாக திகழ்ந்தன. உடலை குளிர்விக்கும் நுங்கு, பதநீர் போன்றவைகளும், இயற்கை இனிப்பான கருப்பட்டிக்கும், நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கிற்கும் மூலப்பொருள் பனைமரம் ஆகும். பனை ஓலைகள் விசிறிகளாகவும், கூடை பெட்டியாகவும், உணவு பரிமாறும் இலைகளாகவும், வேலி தட்டுக்களாகவும் பயன்படுகிறது.
பனை வளர்ப்பு
நன்கு காய்ந்து முற்றிய பனங்கொட்டையை விதைத்தால் மூன்று மாதங்களில் பனங்கன்று உற்பத்தி ஆகும். நட்ட 9 முதல் 10 ஆண்டுகளில் பருவத்திற்கு வந்து விடும். 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஆண், பெண் மரத்தினை அடையாளம் காண முடியும். ஆண் பனை அழகு பனை எனவும், பெண் பனை பருவப்பனை எனவும் அழைக்கப்படுகிறது.
பனையின் வேர் முதல் நுனி வரை பயன்படுகிறது. எனவேதான் இதனை கற்பகத்தரு என்ற அழைக்கின்றனர். இதில் 81 பயன்பாடு பொருள்கள் இருப்பதாக தால விலாசம் என்ற நூல் கூறுகிறது. நாம் பயன்படுத்தும் காகிதம் ஆயுள் காலம் 100 ஆண்டுகள். ஆனால் பனை ஓலையின் ஆயுள் காலம் 400 ஆண்டுகள்.
ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு நாலு புது ஓலைகள் வளரும். நாலு பழைய ஓலைகள் கீழே விழும். 6 -12 பாளைகள் தள்ளும். 100-120 பனம் பழங்கள் காய்க்கும். சராசரியாக ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு பனை சீசனில் 150 லிட்டர் பதநீர் கிடைக்கும். நுங்கு எட்டு முதல் பத்து குலைகள் இருக்கும் ஒரு குலையில் சராசரியாக 20 பனங்காய்கள் இருக்கும். நுங்கு வெட்டாவிடில் பனம்பழமாக கீழே விழும்.
நாலு மாதத்தில் பனங்கிழங்குகள் கிடைக்கும். ஒரு பனைமரம் ஆண்டுக்கு 5000 முதல் 6000 ரூபாய் வரை வருமானம் கொடுக்கும். தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவிற்கு பனை மரங்கள் வெட்டப்படுவது ஒரு முக்கிய காரணமாகும். ஏனெனில் பனை மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை குறைவடையாமல் காக்கக்கூடியவை. ஒரு கிணற்றை சுற்றி பத்து பனைமரம் இருந்தால் கடும் வறட்சி காலங்களிலும் தண்ணீர் வற்றாது என்பது தமிழக விவசாயிகள் பலரும் உணர்ந்த அனுபவம். பனம் பூவை உலர்த்தி கொளுத்தி சாம்பலாக்கி சலித்து அரை கிராம் அளவு நீரில் கலந்து காலை, மாலை குடித்து வர வாத குன்மம், நீர் எரிச்சல் குணமாகும்.
பனங்கிழங்கை உலர்த்தி, பொடித்து தேங்காய் பால், உப்பு சேர்த்து உண்டு வர உடல் வலிமை பெறும். பனங்கிழங்கை அவித்து தோலும் நரம்பு நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் கரப்பான், தோல் அரிப்பு, சீத கழிச்சல் ஆகியவை கட்டுப்படும். குழந்தைகளுக்கு வெயில் காலங்களில் ஏற்படும் வேர்க்குருவை நீங்குவதற்கு நுங்கை அரைத்து உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்து வர பூரண குணம் கிடைக்கும்.
பனைவெல்லம் உடல் வெப்பம் தணிக்கும். பித்தம் தணிக்கும். பனம் பழம் சாப்பிட்டு வந்தால் கண்களில் அனைத்து நோய்களும் நீங்கி பார்வை பலம் பெறும்.
உபரி வருவாய்
பனைமரம் நம்முடைய உணவு மற்றும் மருந்து கலாச்சாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நுங்கு, பனைவெல்லம், பனங்கற்கண்டு ஆகியவை இன்றும் மக்களின் நேரடி பயன்பாட்டில் இருக்கிறது. எனவே பனை மரங்களை நடுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பனை மரங்களை வளர்ப்பதை நமது கடமையாக செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும்.
அதிக பயனை தரும் பனைமரம்... வருங்கால வாரிசுகளுக்கு விதைப்போம் வாங்க!!!
என்.நாகராஜன்
Updated at:
05 Dec 2022 12:57 PM (IST)
பனையின் வேர் முதல் நுனி வரை பயன்படுகிறது. எனவேதான் இதனை கற்பகத்தரு என்ற அழைக்கின்றனர். இதில் 81 பயன்பாடு பொருள்கள் இருப்பதாக தால விலாசம் என்ற நூல் கூறுகிறது.
பனைமரம்
NEXT
PREV
Published at:
05 Dec 2022 12:57 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -