சிறு தானியங்கள் என்பது அனைத்து தட்பவெட்ப சூழ்நிலைகளிலும், மண் வகையிலும், வறட்சி மற்றும் பூச்சி நோய்களை தாங்கி வளரக்கூடிய பயிர்களாகும். அரிசி, கோதுமைக்கு மாற்றாக சர்வதேச அளவில் முன் நிற்பவை சிறுதானியங்கள் தான். எனவே ஊட்டச்சத்து மிகுந்த உணவு தானியங்களை உற்பத்தி செய்து உணவே மருந்தாக உட்கொள்ள சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக வங்கியின் கணக்குப்படி உலகின் எடை குறைவான குழந்தைகளில் 49 சதவீதம் பேரும், ஊட்டச்சத்து குறைவால் வளர்ச்சி தடைப்பட்டுள்ள குழந்தைகளில் 34% பேரும் இந்திய குழந்தைகள் தான். நமது முன்னோர்கள் காலத்தைப் போன்று நமது உணவு பழக்கத்தில் சிறு தானியங்களை சேர்ப்பதன் வாயிலாக இக் குறைபாட்டினை நிவர்த்தி செய்ய இயலும். சிறுதானியங்கள் பொதுவாக குறுகிய கால பயிர்களாகும். இவை தானிய பயிர்களாகவும், தீவனப் பயிர்களாகவும் மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்காகவும் பயிரிடப்படுகின்றன. மொத்த சாகுபடி பரப்பில் ஒரு சதவீத பரப்பில் மட்டுமே சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

சிறுதானியங்கள் மிகவும் சத்து நிறைந்த குளுட்டன் அமிலத்தன்மையற்ற ஒரு உணவு வகை. எனவே தான் இவை எளிதில் செரிமானமாக கூடிய தன்மை கொண்டதாக உள்ளது. இவற்றில் அதிக அளவில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி குழுமத்தை சார்ந்த நயாசின், தையமின், வைட்டமின் ஈ போன்றவை நிறைந்து காணப்படுகிறது. மேலும் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் அதிகமாக உள்ளது.

உடல் ஆரோக்கியத்தில் சிறு தானியங்களின் பங்கு:

சிறுதானியங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியினை தடுக்கிறது. பெருங்குடலின் செயல்பாட்டை சீராக்குகிறது. உடல் நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியை தூண்டுகிறது. உடல் சுறுசுறுப்பிற்கு காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகிறது. சிறு தானியங்களில் அதிக அளவில் காணப்படும் மக்னிசியம் தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியை தடுக்கிறது.

சிறுதானியங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சிறு தானியங்களில் உள்ள நியாசின் ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்வதை குறைக்கிறது. அன்றாடம் சிறுதானியங்களை பயன்படுத்துவோருக்கு இரண்டாம் வகை அதாவது இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் வருவதில்லை. சிறு தானியங்களை அதிகளவில் உணவு பயன்பாட்டில் சேர்க்கும் பொழுது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகின்றன.

ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் இருப்பதற்கு உதவுகின்றன. சிறு தானிய பயன்பாட்டினால் பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகிறது. அதிக அளவு நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதை தடுக்கின்றன. உடல் பருமன் கொண்டவர்களுக்கு சிறு தானியங்களை பயன்படுத்தும் போது உடல் எடை சீராக குறைகிறது.

அரிசி மற்றும் கோதுமையை விட சிறு தானியங்களில் அதிக அளவு ஊட்டச்சத்து இருப்பதாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது சிறுதானியத்தில் புரதம் நார்ச்சத்து நியாசின் தயமின் மற்றும் மெக்னீசியம் கால்சியம் பொட்டாசியம் ஆகியவையும் அதிக அளவில் காணப்படுகிறது சிறு தானியங்களில் உள்ள பெல்டிக் அமிலம் எனப்படும் தாவர ஊட்டச்சத்து காணப்படுவதால் மனித உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதால் புற்றுநோய் வாய்ப்பினை வெகுவாக குறைக்கிறது எனவே சிறு தானியங்களை பயிரிடுவோம் சிறந்த மகசூலை அடைவோம் அதனைப் போற்றி பாதுகாப்போம் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி கூடுதல் லாபம் அடைவோம்.