தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2026-2027ம் ஆண்டுக்கான வகைப்படுத்தப்பட்ட பயிர்களுக்கான பயிர் கடன் அளவுகள் நிர்ணயித்தல் குறித்து, மாவட்ட தொழில் நுட்ப குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை, கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை, நபார்டு வங்கி, மாவட்ட முதன்மை வங்கி, சர்க்கரை ஆலை, மீன்வளத்துறை, பட்டுப்புழு வளர்ப்பு துறை அதிகாரிகள், முன்னோடி விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: பயிர் கடன் அளவு நிர்ணயம் செய்யும் போது, மாவட்ட, மாநில தொழில் நுட்பக் குழு பரிந்துரை செய்வதற்கு முன்னர், வேளாண் பல்கலைக்கழகம் ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய எவ்வளவு ரூபாய் செலவிடுகிறது என்பதை அடிப்படை அளவுகோலாக கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் பார்த்தால் 2025 -2026 ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற பயிர் கடன் அளவை காட்டிலும் 30 சதவீதம் பயிர் கடனை உயர்த்தி, ஒவ்வொரு பயிருக்கும் கடன் அளவு நிர்ணயம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளால் பயிரிடப்படுவதால் பயிர் கடன் அளவு 15 சதவீதம் கூடுதலாக கணக்கிட்டு குத்தகை உழவர்களுக்கும் பயிர் கடன் வழங்க வேண்டும் என்ற புதிய நடைமுறை பின்பற்ற வேண்டும்.
இடுபொருட்கள் செலவினங்களில் டீசல் ஆயில் இன்ஜின் கொண்டு சாகுபடி செய்கின்ற விவசாயிகள் கூடுதல் செலவு செய்யப்பட வேண்டியுள்ளதால் அத்தகைய விவசாயிகளுக்கு தனியாக கடன் அளவு நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண்மைக்கான மின் விகித பட்டியல் (TARIFF 3A1 )ன் கீழ் மின் இணைப்பு பெற்று வேளாண் உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்படுவதால் உற்பத்தி செலவினம் கூடுதலாகிறது. எனவே அவ்வாறான மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளுக்கு கடனளவு கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டு வழங்க வேண்டும்.
மூலிகை பயிர்கள் சாகுபடி செய்ய விரும்புகின்ற உழவர்களுக்கும் புதிய பயிர் கடன் அளவு நிர்ணயிக்கப்பட்டு பயிர் கடன் வழங்கப்பட வேண்டும். மூலிகை பயிர்களில் கரிசலாங்கண்ணியை மூலிகை பயிராக அரசு அறிவிக்க வேண்டும். பயிர் கடன் அளவில் பயிர் காப்பீட்டுக்கு உரிய பிரீமியம் தொகையையும் சேர்த்து கணக்கிட வேண்டும்.
உள்நாட்டு மீன் வளர்ப்பு , வெண்பன்றி வளர்ப்பு , தேனீ வளர்ப்பு , கறவை மாடு வளர்ப்பு, வெள்ளாடு, செம்மறி ஆடு வளர்ப்பு பராமரிப்புச் செலவுகள் தீவனச் செலவுகள் மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான செலவுகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் கடன் அளவும் உயர்த்தப்பட வேண்டும்.
செவ்வாழை சாகுபடி செய்ய இரு மடங்கு கூடுதல் செலவு ஆவதால் செவ்வாழைக்கு கூடுதலாக கடன் அளவு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். வேளாண் இயந்திரங்களான உழவு, நடவு, களை எடுக்கும் கருவிகள், அறுவடை இயந்திரங்கள், கட்டு கட்டும் இயந்திரங்கள், டிரோன்கள் மற்றும் சரக்கு ஏற்றும் வாகனங்களின் வாடகைகள் அரசு நிர்ணயம் செய்வதை விட கூடுதலாக தனியார் வரம்பு மீறிஅதிகம் வசூலிப்பதால் அரசு நிர்ணயம் செய்கின்ற கடன் அளவைவிட கூடுதலாக ஆகின்ற உற்பத்தி செலவினத்துக்கு விவசாயிகள் தனியாரிடம் கூடுதலாக கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது என்பதை அரசு கருத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு விதை தேவையைப் பொறுத்த வரை 15 லிருந்து 20% விதைகள் மட்டுமே அரசால் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 80 விழுக்காடு விதைகள் தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளதால், கடன் அளவு நிர்ணயம் செய்யும் போது தனியார் நிறுவனங்களின் விதையின் கூடுதல் விலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உற்பத்தி செலவு, இடுபொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால், ஏக்கர் ஒன்றுக்கு நெல் பயிருக்கு ரூ. 45,000 மும், கரும்புக்கு ரூ. 1.10 லட்சம், வாழைக்கு ரூ.1.5 லட்சமும் கடனளவு நிர்ணயம் செய்ய வேண்டும். வெற்றிலை சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.18 லட்சம் கடன் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகளின் இந்த கோரிக்கைகளை மாநில கூட்டத்துக்கு பரிந்துரை செய்வதாக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.