தஞ்சாவூர்: விதை நெல், உரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெல் கொள்முதலில் எவ்வித தடையும் இருக்கக்கூடாது. நிபந்தனைகளை தளர்வு செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:
தோழகிரிபட்டி கோவிந்தராஜ்: வேளாண் துறை மூலம் சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல்லை மானிய விலையில் கொடுப்பதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதேபோல் உரங்களும் தட்டுபாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளாக இருந்தாலும் கூட்டுறவு வங்கிகளாக இருந்தாலும் விவசாயிகளுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் ரூபாய்.5 லட்சம் வரை கடன் கொடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை கட்டுமானம் உள்ள புதிய ரகங்கள் தேர்வு செய்து வழங்க வேண்டும்.
ஜீவகுமார்: முப்பது ஆண்டுகள் காணாத அளவு குறுவை, ராட்சச மகசூல் விளைந்தமைக்கு காரணம் முறைப்பாசனம் இல்லாமல் தண்ணீர் கொடுத்ததே ஆகும். சம்பாவிற்கும் அவ்வாறே தண்ணீர் முறைப்பாசனம் இன்றி தரவேண்டும். செப்டம்பர் மாத வழங்க வேண்டிய 37 டிஎம்சியை கர்நாடகத்திடம் வாங்க வேண்டும். சம்பா துவங்கும் நிலையிலும் குறுவை சிறப்பு தொகுப்பு நிதி பயனாளிகள் பலருக்கு கிடைக்கவில்லை. உடன் வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்.1 ல் திறக்கப்பட வேண்டும். ஈரப்பதம் உள்ளிட்ட நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். சாக்குக்கு 50 கிலோ என எடை கொள்முதல் செய்யவேண்டும். ஆற்றில் மூழ்கி உயிர் இழப்பை தடுக்க போலீஸ் ரோந்துகளை அதிகரிக்க வேண்டும். கோவில்பத்து கொள்முதல் நிலையத்தை உடனே கட்டித்தரவேண்டும். கட்டளை மேட்டு வாய்க்கால்,உய்யக்குண்டான் ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும். பயிர்க்கடனை புது உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு உரத்தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும்.
சுந்தர விமலநாதன்: கோடை நெல் கொள்முதல் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு சிறப்பாக நடைபெற்ற நிலையில், சாக்கு தட்டுப்பாடு, போதிய இடமின்மை, மழையில் நனைந்த நெல் மூட்டைகள் என கசப்பான அனுபவத்தை நாம் பெற்றுள்ளோம். இந்நிலையில், குறுவை கொள்முதல் செப்.1 முதல் தொடங்க உள்ளது. எனவே, நெல் கொள்முதல் தடங்கல் இல்லாமலும், முறைகேடுகள் இல்லாமலும், விவசாயிகளை அலைக்கழிக்காமலும் கொள்முதல் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உயர் அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய ஆயத்த கூட்டத்தை முன்கூட்டியே கூட்டி அதற்கான திட்டமிடலை செய்ய வேண்டும். கும்பகோணம் நகரில் செல்லும் ஐந்து பாசன வாய்க்கால்களையும் மீண்டும் நீர்வள ஆதாரத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். திருமண்டங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கான ஒப்பந்த நகல்களை வழங்க வேண்டும்.
ஏகேஆர்.ரவிச்சந்தர்: முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விபத்தில் மரணம் அடைந்தால் இரண்டு லட்சம் உடல் உறுப்பு இழப்பிற்கு ரூபாய் ஒரு லட்சம் இயற்கை மரணத்திற்கு ரூபாய் 30,000 மற்றும் இறுதி சடங்கு செய்ய ரூபாய் பத்தாயிரம் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தின் மூலம் கருவுற்ற தாய்மார்களுக்கு உதவி தொகை, திருமண உதவித்தொகை, கல்லூரி படிப்பிற்கு உதவி தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகளை இத்திட்டத்தின் மூலம் செய்து வந்தார்கள். தற்போது திட்டம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய தொழில் புரியும் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைவருக்கும் உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டையை வழங்கி திட்டத்தில் அறிவித்துள்ள அனைத்து பயன்களையும் விவசாயிகளுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் கடன் இலக்கை உயர்த்தி கூடுதலான நபர்களுக்கு விவசாயிகளுக்கான பயிர் கடன் வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு மின்மோட்டார் இயக்கி நீர்பாசனம் செய்ய இலவசம் மின் இணைப்பு வழங்குவதற்காக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மின் இணைப்புக்கு கடிதம் அனுப்பி பல மாதங்கள் ஆகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
பாச்சூர் புண்ணியமூர்த்தி: ஒரத்தநாடு ஒன்றியம் பாச்சூர் அய்யம்பட்டியில் இருந்து கீரத்தூர் வரை சாலை சேதமடைந்துள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக நெல் உற்பத்திக்கு ஆகும் செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையை ரூ. 750 குவிண்டால் ஒன்றுக்கு உயர்த்தி வழங்க வேண்டும்
அய்யம்பேட்டை முகமது இப்ராஹிம்: இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு அறிவித்து அதனை நடைமுறைபடுத்தியுள்ளது. இதனால் பருத்தி மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குவிண்டலுக்கு விலை குறைவு ஏற்பட்டுள்ளது ஆடைகள் உற்பத்தி ஜவுளி நிறுவனம் மிக பெரிய பாதிப்புகள் அடைத்து உள்ளது. எனவே மத்திய, மாநில அரசு வரிவிதிப்பை தளர்த்தி பருத்தி மற்றும் ஆடைகள் உற்பத்தி ஜவுளி நிறுவனங்கள் காப்பாற்ற வேண்டும்மரபணுகள் மாற்றப்பட்ட புதிய 2 நெல் ரங்களை கொண்டு வருவதை நமது நாட்டில் ஏற்றுக் கொள்ளக் கூடாது. எனவே இது போன்ற விதைகளை இது போன்ற விதைகளை தமிழ் நாட்டில் விவசாயத்திற்கு அனுமதி தரக்கூடாது.
பெரம்பூர் அறிவழகன்: களைக்கொல்லியை தடை செய்து 100 நாள் பணியாளர்களை களை எடுக்க பயன்படுத்த வேண்டும். வேளாண் பொறியியல் துறையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எந்திரங்களை இ.வாடகைக்கு பயன்படுத்த வேண்டும். திருவையாறு பகுதியில் வரும் சம்பா பருவத்திற்கு கோ 50 விதைகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரகலநாதன்: பூதலூர் தாலுக்கா ஒரத்தூர் பகுதியில் உள்ள வலம்புரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அதேபோல் வாய்க்காலை தூர்வாரி வடிகால் வசதி செய்து தர வேண்டும். மழைக் காலங்களில் தண்ணீர் அதிகமாக வரும் பொழுது விவசாய நெருப்பயிர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறது. எனவே வலம்புரி வாய்க்காலை தூர் வார வேண்டும்.
இளங்கோவன்: தஞ்சை மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லாமல் மிக மிக மோசமான நிலையில் கால்நடைகள் உள்ளது. எனவே ஆக்கிரப்புகளை அகற்றி மேய்ச்சல் நிலங்களை மீட்டு தர வேண்டும். ஏரி குளங்களுக்கு நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றி மரங்களை வைத்து வழி முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய ஏரிகளும், குளங்களும் நீர் இல்லாமல் கிடக்கிறது. எந்த மழைக்காலத்திலும் மழை நீர் உள்ளே வருவதில்லை. எனவே ஆக்கிரப்புகளை அகற்றி நீர்வழி பாதைகளை சரி செய்து தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.