தஞ்சாவூர்: தேவைப்படும் இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். தட்டுப்பாடின்றி உரங்கள், விதைநெல் கையிருப்பு வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் : தஞ்சாவூர் மாவட்டத்தில் எங்கெல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைப்படுகிறதோ அங்கே எல்லாம் உடனே கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும். கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.400 விலை அறிவிக்க வேண்டும். ஆலைக்கு கரும்பு பதிவு செய்த விவசாயிகளுக்கு கரும்புக்கு பயிர் காப்பீட்டை ஆலை நிர்வாகம் எத்தனை ஏக்கருக்கு பதிவு செய்துள்ளதோ அத்தனை ஏக்கருக்கும் பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை பெற்று தர வேண்டும். கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. உடன் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளாம்பெரம்பூர் ரமேஷ் : பூதலூர் நில அளவைத் துறையில் பணியாளர்கள் பற்றாக்குறைகள் பொதுமக்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நில அளவைக்கு பணம் கட்டிவிட்டு அலுவலகத்திற்கு மக்கள் சென்று அலைந்து திரிந்தும் குறிப்பிட்ட நேரத்தில் அளவீடு செய்யும் பணியை முடித்து தர முடியாத நிலை உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் இந்த சூழ்நிலை நிலவுகிறது. உடன் தேவைப்படும் நில அளவை பணியாளர்களை நியமிக்க வேண்டும். கோணக்கடுங்கலாற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை மற்றும் பள்ளி கொடிகளை அகற்றி ஆற்றின் குறுக்கே விழுந்து உள்ள தேக்கு மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். உருவை அறுவடை திருவையாறு மற்றும் பூமி பகுதிகளில் நிறைவடையும் நிலையில் உள்ளது. சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர், வேளாண்மை விரிவாக்க மையங்களில் எந்தெந்த விதை நெல் ரகங்கள் கையிருப்பில் உள்ளது என தெரிவிக்க வேண்டும். உயிர் உரங்கள் மற்றும் ஜிங்சல்பேட் இருப்பு குறித்த விவரத்தையும் வெளியிட வேண்டும்.
ஏ கே ஆர் ரவிச்சந்தர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் செயற்கையான உர தட்டுப்பாட்டை உருவாக்கி உர விலையை உயர்த்தி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். தனியார் உர விற்பனையாளர்கள் யூரியா பொட்டாஸ் டிஏபி போன்ற உரங்களை பதுக்கி வைத்துக் கொண்டு சேர்க்கையான உர தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். எனவே கூடுதல் விலையில் உர விற்பனை செய்யும் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கடன் வழங்க வேண்டும்.
பாசனதாரர் சங்க தலைவர் தங்கவேல்: ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாப்பட்டு தொகுதியில் புற தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. சம்பா பருவம் தொடங்கி நடந்து வரும் நிலையில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் சூப்பர் பொட்டாஷ் டி ஏ பி யூரியா ஆகிய உரங்கள் ஆம்பலாப்பட்டு தெற்கு வடக்கு ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இருப்பு இல்லை. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். தனியாரில் அளவுக்கு அதிகமான விலையில் விற்பனை செய்கிறார்கள். அதற்கு ரசீதும் வழங்குவதில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரமூர் அறிவழகன்: திருவையாறு பகுதியில் குறுவை அறுவடை தொடங்கி விட்ட நிலையில் குறுவை தொகுப்பு பதிவு செய்த விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடை இயந்திர வாடகையை மழையையும், இயந்திர தட்டுப்பாட்டையும் பயன்படுத்தி உயர்த்துவதை தடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் மின் உலர்த்தி பயன்படுத்த வேண்டும். கொள்முதலின் போது ஈரப்பதத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பருவம் தவறிய மழையால் பாதித்த விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணினி பட்டா சிட்டா வலைத்தளம் அடிக்கடி வேலை செய்யாமல் இருக்கிறது இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் அலைக்கழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
பிரகலநாதன்: பூதலூர் தாலுகா மேகளத்தூர், உஞ்சினி, ஒரத்தூர், நத்தமங்கலம் பாசன வாய்க்கால் வழியாக வரும் தண்ணீர் பூதராயநல்லூர் வாய்க்கால் ஆகிய வலம்புரி என்கின்ற வண்ணாத்தி வாய்க்காலில் சங்கமம் ஆகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் பெருகி வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் தண்ணீர் வடிய முடியாமல் குறுவை பயிர் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அங்கு வடிகால் வசதி செய்து தந்தால் விவசாயிகள் சாகுபடி செய்து முன்னேற்றம் அடைவார்கள்.
விவசாயி மாதவன்: ஒரத்தநாடு வட்டம் அம்பலப்பட்டு தெற்கு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குறும்பை குளம் ஏறி நீர் பிடிப்பு பகுதியாகும். இது ஆம்பலாப்பட்டு கிராமம் ஆர் ஓ ஆர் மற்றும் ஆர்எஸ்ஆர் பதிவேட்டில் பதிவாகி 38.85 ஏக்கராக உள்ளது. இந்த பகுதி தனியாருக்கு சொந்தம் என பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தை ஆய்வு செய்து தனியாருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.