தஞ்சாவூர்: தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பயிர் காப்பீட்டுக்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:


விவசாய சங்க துணை செயலாளர் வக்கீல் ஜீவக்குமார்: கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியவில்லை. இதற்குக் காரணம் முறைப்படி இந்த தேதியில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததுதான். எனவே இனிவரும் காலங்களில் கூட்டம் நடைபெறும் தேதி, நேரத்தை முறைப்படி அறிவிக்க வேண்டும். உய்யக்கொண்டான், நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி விட்டனர். உடன் தண்ணீர் திறந்து விட வேண்டும். இதற்காக இக்கூட்டத்தில் போராட்டம் நடத்த இருந்தோம். ஆனால் உங்களின் நடவடிக்கையால் அதை மாற்றிக் கொண்டோம். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ராபி மற்றும் ராபி சிறப்பு பருவ நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யும் கடைசி நாள் நவம்பர் 15 என்று உள்ளதை நீட்டிப்பு செய்ய வேண்டும் . அல்லது தற்போது சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சாகுபடி செய்துள்ளனர் என்று சான்றிதழ் வழங்க வேண்டும்.


செங்கிப்பட்டி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்று  வட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.




கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ்: 2024-25 அரவை பருவத்தை டிசம்பர் முதல் வாரத்திலேயே தொடங்க வேண்டும். டிசம்பர் 25ம் தேதி என்பது ஏற்புடையதல்ல. கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகைக்கு அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தி தீபாவளிக்குள் கரும்பு ஊக்கத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் ஜீனி தயாரிப்பதை குறைத்து நாட்டு சர்க்கரை தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும்.


ஆழ்துளைக்கிணறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் புண்ணியமூர்த்தி: பாச்சூர் அய்யம்பட்டி-கீரத்தூர் கிராமம் தார் சாலை பழுது அடைந்துள்ளது. உடனே அங்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும். பாச்சூர் ஓடைக்குளம், பாச்சேரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்.


வாளமர்கோட்டை இளங்கோவன்: கல்லணை கால்வாயில் முறை வைத்து தண்ணீர் திறக்காமல் கூடுதலாக திறந்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும்.


துரை. ரமேஷ்: காவிரி பிரிவு கோணக்கடுங்கலாறு அதன் பிரிவான நடுக்கடுங்கலாறு மற்றும் வெண்ணாறு பிரிவான ரெட்டை வாய்க்கால் , பிள்ளை வாய்க்கால் போன்றவற்றில் ஆகாயத்தாமரை, வள்ளிக்கொடி, சம்பு போன்ற தாவரங்கள் படர்ந்து சாகுபடிக்கு நீர் பாய,  வடியவும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் துறை விரிவாக்க பணியாளர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் பாசன வடிகால் வாய்க்கால்களை கள ஆய்வு செய்து நீர்வளத்துறைக்கு  பரிந்துரைத்து தூர் வாரவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.