தஞ்சாவூர்: குறுவை தொகுப்பு திட்டத்தில் பதிவு செய்ய வரும் ஆக.15 வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தஞ்சையில் நடந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திருநாசுஜாதா தலைமையில் நடைபெற்றது. இதில் பூதலூர், ஒரத்தநாடு, திருவையாறு, தஞ்சாவூர் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: மேட்டூர் அணையில் போதியளவு தண்ணீர் இல்லாமல் உள்ளதால், நடவு செய்யப்பட்டுள்ள குறுவைப் பயிரை காப்பாற்ற முடியாமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போதே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நடவு செய்த நெற் பயிரை காப்பாற்ற தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்துக்குரிய தண்ணீரை பெற வேண்டும். திருவோணம் பகுதியில் உள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீர் காலதாமதமாக வந்துள்ளது. இன்னும் அந்த பகுதியில் குறுவை நடவு செய்யவில்லை. ஆனால் நடவு செய்தவர்களுக்கு மட்டுமே குறுவை தொகுப்புத் திட்டம் வழங்கப்படும் என கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாதம் 31ம் தேதிக்குள் குறுவை தொகுப்புத் திட்டத்தில் பதிவு செய்வது முடிந்து விடுவதாக வேளாண் துறையினர் கூறுகின்றனர். கடைமடைப் பகுதிக்கு காலதாமதமாக தண்ணீர் வந்துள்ளதால், அந்த பகுதி விவசாயிகளும் பயன்பெற ஏதுவாக குறுவை தொகுப்பு திட்டத்தில் பதிவு செய்வதை ஆக.15ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் 100 நாள் வேலைப் பணிகள் நடைபெறுவதால், விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. எனவே விவசாயப் பணிகளுக்கு 100 நாள் தொழிலாளர்களை பயன்படுத்தும் வகையில், திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
தமிழக முதல்வர் கடந்த நிதிநிலை அறிக்கையில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை எனவே அதுகுறித்து அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும். கடந்த ஆண்டைப் போல இந்தாண்டும் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவைப் பருவத்தை நவம்பர் மாதத்திலேயே தொடங்க வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்காச்சோளம் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே உரிய விலை கிடைக்க ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
இந்த கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.