நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக திறந்து விடப்பட்ட காவிரி நீர் போதுமான அளவு வராததால் 60 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் இருப்பதாகவும், கர்நாடகவிடம் உரிய நீரை பெற்று பாசனத்திற்கு திறந்து விட வலியுறுத்தியும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



 

நாகை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிரைக் காப்பாற்ற  காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு போதுமான அளவு வராத நிலையில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. குறைதீர் நாள் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாநில பொதுச் செயலாளர் தனபாலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியில் செய்யப்பட்டுள்ள குருவைப் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையில் காவிரி நீரை கர்நாடக அரசு இதுவரை வழங்காததை கண்டித்தும்,  தமிழக அரசு கர்நாடகத்திடம் உரிய அழுத்தம் கொடுத்து தண்ணீரை பெற முயற்சி எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் கோஷம் எழுப்பினர். நாகை மாவட்டத்தில் மேட்டூர் நீரை தவிர வேற எந்த நீரும் ஆதாரமாக இல்லாத நிலையில் 60,000 ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள், குருவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையில்  குருவை சாகுபடிக்கு காப்பீடு செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும், கர்நாடக அரசிடம் இருந்து உரிய நீரை பெற்று தர வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம் பல்லில்லாத ஆணையமாக செயல்படுவதாகவும், விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். திருமருகல், தலைஞாயிறு, வேதாரண்யம், கீவளூர் கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.