தஞ்சாவூர்: குறுவை சாகுபடியில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் நல்லமுத்துராஜா தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவை சாகுபடி 110230 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 96780 ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. குறுவைக்கு ஏற்ற ரகங்கள் ஆடுதுறை 36, 43, 45, கோ 51, டிபிஎஸ் 5, ஆடுதுறை 53. ஏஎஸ்டி16, ஆடுதுறை 37, சாதாரண முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 24 கிலோ, இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு 15 கிலோ நெல் விதை போதுமானது.
சூடோமோனாஸ் ஒரு கிலோ விதை நெல்லுக்கு 10 கிராம் வீதம் கலக்க வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற திரவ உயிர் உரங்களை விதையுடன் கலந்து விதையை ஊற வைத்து நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
1 ஏக்கர் நாற்றுகளை 150 மிலி திரவ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவில் நனைத்து நட வேண்டும். நடவின் போது 200 மிலி திரவ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியாவை மண் அல்லது தொழுஉரத்துடன் நடவு வயலில் தெளிக்க வேண்டும். நடவு வயலில் கடைசி உழவுக்கு முன் 200 கிலோ ஜிப்சம் இட வேண்டும். ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் மணலுடன் கலந்து இட வேண்டும்.
குறுவை பயிருக்கு மண் ஆய்வு செய்து அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மணிச்சத்து முழுவதையும், தழை மற்றும் சாம்பல் சத்தில் கால் பங்கையும் அடியுரமாக இடவேண்டும். மண் ஆய்வு செய்யப்படவில்லையெனில் பொது பரிந்துரைப்படி உரமிட வேண்டும். உரங்களை பயிரின் வளர்ச்சி நிலைகளில் இட வேண்டும்.
குறுவைக்கு அடியுரமாக 44 கிலோ டிஏபி, யூரியா 25 கிலோ, பொட்டாஷ் 17 கிலோ இடவேண்டும். முதல் மேலுரம் 22 கிலோ யூரியா. இரண்டாம் மேலுரம் 22 கிலோ யூரியா, பொட்டாஷ் கிலோ, மூன்றாம் மேலுரம் 22 கிலோ யூரிய இடவேண்டும். மண்வளம் 17 இணையதளம் மூலம் விவசாயி தன் பெயர், சர்வே எண் பதிவு செய்து வயலுக்கு இட வேண்டிய உர பரிந்துரையை அறிந்து அதன்படி உரமிடலாம். களை நிர்வாகம் முக்கியமான ஒன்றாகும்.
கை களை எடுப்பது சிறந்தது. களை கொல்லி ஏக்கருக்கு 1 லிட்டர் பூட்டக்குளோர் 20 கிலோ மணலுடன் கலந்து நடவு செய்த மூன்று நாட்களுக்குள் தெளிக்க வேண்டும். நடவு சமயத்தில் 2 செமீ உயரம் வரை நீர்கட்ட வேண்டும். இந்த அளவில் நீரை நடவு செய்து ஒரு வாரம் வரை பராமரித்து நாற்று நன்கு பச்சை பிடித்து பின் 5செமீ உயரம் நீர் நிறுத்தி கட்டிய நீர் மறைந்த பின் மறுபடியும் 5 செமீ அளவில் நீர் கட்டினால் போதுமானது.
இவ்வாறு பாசன நீரை காய்ச்சலும் பாய்ச்சலுமாக அளித்து வர வேண்டும். வயலை மேடு பள்ளம் இல்லாமல் சமன் செய்து நடவு செய்யும் பொழுது பாசனநீர் தேவை வெகுவாக குறைகின்றது. குறுவையில் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாக இருக்காது. பூச்சி அல்லது நோய் தாக்குதல் அதிகமாக இருக்காது. பூச்சி அல்லது நோய் காணப்படின் வேளாண்துறை அலுவலர்களை அணுகி தகுந்த ஆலோசனைகளை பெற்று கொள்ளலாம்.
தஞ்சை மாவட்ட விவசாயிகள் அனைவரும் விடுபடாமல் தங்களது ஆண்ட்ராய்டு செல்போனில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து தொழில்நுட்பங்களும், இடுபொருட்களும் உரிய விதிகளின்படி பெற்று கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.