தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட சிறு, குறு விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை உழுவு இயந்திரங்களைப் பயன்படுத்தி 50 சதவீத மானிய வாடகையில் உழுவு பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அழைப்பு விடுத்துள்ளார்.



தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக விவசாய நிலங்களை சமன் செய்யும் புல்டோசர்கள் மணிக்கு ரூ.1230, உழவுப் பணிகளை மேற்கொள்ள டிராக்டர் உடன் கூடிய இணைப்பு கருவிகளான நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம், வரப்பு செதுக்கி சேறும் பூசும் கருவி, தென்னை மட்டை தூளாக்கும் கருவி,  ரோட்டவேட்டர், 5 வரிசை கொத்து கலப்பை, சட்டிக் கலப்பை மற்றும் 9 வரிசை கொத்து கலப்பை ஆகியன மணிக்கு ரூ.300ம், நெல் அறுவடைப் பணிகள் மேற்கொள்ள டயர் வகை இயந்திரங்களுக்கு ரூ.1160 மற்றும் பெல்ட் வகை நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.1880 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வாடகைக்கு வழங்கப்பட்டு வரும் மேற்காணும் கருவிகளுக்கு செலுத்தப்படும் வாடகையில் 50 சதவிகிதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இவற்றை விவசாயிகள் பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ளும் சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை பணிகளை மேற்கொள்ள அல்லது 5 மணி நேரத்திற்கு வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏக்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.1250 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.





பாசன நினங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ளும் சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 1/2 ஏக்கர் வரை பணிகளை மேற்கொள்ள அல்லது 2 1/2 மணி நேரத்திற்கு வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏங்கர/மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.625 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.

மேற்கண்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்யும் சமயம் சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றையும் பதிவு செய்து பயன் பெறலாம். செலுத்திய வாடகையில் மானியத்தொகையினை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர்-613 004 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல் கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவிசெயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் -l,612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை 614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.