வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பை சந்திக்காத வகையில் அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றுவதன் வாயிலாக தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்கலாம்.



இதுகுறித்து தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.


தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும். காய்கறி பயிர்களான வெண்டை, கத்தரி, கொத்தவரை, மிளகாய் மற்றும் கொடி வகை காய்கள் ஆகியவற்றுக்கு முறையாக மண் அணைப்பது மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம் நீர் தேக்கத்தினால் வேர்கள் அழுகுவதை தவிர்க்கலாம். காய்கறி பயிர்களில் காய்ந்து போன இலைகளை அகற்ற வேண்டும்.

இலைவழி உரம் அளித்து பயிரின் ஊட்டச்சத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். கவாத்தின் போது வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 300 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து பூசுவதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குவதை தவிர்க்கலாம். 1 முதல் 3 வயது உள்ள கன்றுகள் மற்றும் ஒட்டு செடிகளை முட்டுக் கொடுப்பதற்கு குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது.

மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தோப்பினை சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வழிகள் செய்ய வேண்டும். வாழை தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். நிழல் வலை குடிலின் குழிதட்டில் தயார் செய்யப்பட்டுள்ள நாற்றுகள் அதிகப்படியான மழை நீரால் பாதிப்படையாமல் இருக்க நெகிழித்தாள்கள் கொண்டு நாற்றுகளை மூடி பாதுகாக்கலாம்.


காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் எதிர் திசையில் கயிறு, கழிகள் மூலம் முட்டு கொடுத்து காற்றின் வேகத்தில் இருந்து புதிதாக நடவு செய்த செடிகள் மற்றும் மரத்தை சாயா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும். கனமழை அல்லது காற்றுக்கு பின் மரங்களில் பாதிப்பு இருப்பின் மரத்தை சுற்றி மண் அணைத்து மரங்களுக்கு தேவையான தொழு உரம் இடவேண்டும். பூஞ்சாணக் கொல்லிகள் மற்றும் உயிர் நோய் கட்டுப்பாட்டு காரணிகளை இட்டு நோய் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.