தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள் குறித்து தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

 


திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேரடி விதைப்பில் 62,000 ஏக்கர் பரப்பளவிலும் நடவுப் பணிகளில் ஒரு லட்சத்து ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவிலும் விவசாயிகள் தற்பொழுது தங்களது நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை 80 ஆயிரம் ஏக்கர் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 93 ஆயிரம் ஏக்கர் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் தற்பொழுது நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனயர். இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடிகள் தண்ணீரில் இல்லாமல் கருகி வருகிறது. மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது. தமிழக அரசின் அறிவிப்பை ஏற்று, நிகழாண்டில் டெல்டா மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். இந்த நிலையில், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் திறக்கப்பட்ட 10 நாட்களுக்குள்ளாகவே அணை மூடப்பட்டது.



 

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், கடை மடை வரை சென்று கிளை வாய்க்காலில் வழியாக வயல்களுக்கு ஏறி பாயாத நிலையில், தண்ணீர் இன்றி குறிவை நெற்பயிர்கள் முளைத்த நிலையிலேயே காயத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது பெய்த சிறு மழை உயிர்நீராக அமைந்ததால், குறுவை சாகுபடி நெற்பயிர்கள் ஆங்காங்கே தப்பி பிழைத்துள்ளன. இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் தர கர்நாடக அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள், காய்ந்து வருகின்ற குறுவை நெற்பயிர்களை வளர்த்தெடுத்து அறுவடை செய்ய முடியுமா என்றும், சம்பா சாகுபடியையாவது செய்ய முடியுமா என்ற அச்சத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், காய்ந்து வரும் குருவை நெற்பயிர்களுக்கு விவசாயிகள் நிவாரணம் கேட்கத் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை ஆணையர் எல். சுப்பிரமணியன் இன்று திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி நெற்பயிர்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய வருகை தந்துள்ளார்.

 

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்த அவர், திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை, கோட்டூர் வட்டாரங்களிலும் ஆய்வு செய்ய உள்ளார். அருகில் உள்ள நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சுவதற்கான சாத்தியங்கள், பயிர்கள் தொடர்ச்சியாக காய்ந்து போகாமல் இருக்க அடிக்க வேண்டிய ஸ்பிரேயர்கள் போன்றவை குறித்து களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை செய்தார்.




 

இந்த நிலையில் வடபாதிமங்கலம் அருகே ஓவை பேரையூர் என்ற இடத்தில் வேளாண் ஆணையர் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது அருகில் உள்ள விவசாயிகள் அவரிடம் எங்கள் பகுதியில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகிறது என குற்றம் சாட்டினர் உடனடியாக அந்தப் பகுதிக்கு வேளாண் ஆணையர் சென்று ஆய்வு செய்தார். வேளாண்துறை ஆணையரின் இந்த ஆய்வு காவிரி டெல்டா விவசாயிகளிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.